DMK TVK: தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக அறியப்பட்டு வந்தவர் விஜய். இவர் தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். இந்த கட்சி ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை வருடங்களே ஆன நிலையில் அதன் தாக்கம் அரசியல் களத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். மேலும் கரூர் சம்பவம் விஜய்யின் அரசியல் பயணத்தில் மறக்க முடியாத துக்க நிகழ்வாக மாறியுள்ளது.
வருங்காலத்தில் விஜய் முதல்வர் ஆனாலும் கரூர் விபத்து அவருக்கு பெரும் பாதகமாகவே அமையும், அதனை வைத்து விஜய்யை பின்னுக்கு தள்ளும் முயற்சிகள் நடைபெற்று கொண்டு தான் இருக்கும். விஜய் தனது அரசியல் பயணத்தின் தொடக்கத்திலேயே, திமுக தான் தவெகவின் அரசியல் எதிரி என்றும், திமுக-தவெகவிற்கு தான் போட்டி என்றும் கூறியிருந்தார். ஆனால் இதனை பொருட்படுத்தாத திமுக அதன் பணிகளில் தீவிரம் காட்டி வந்தது. மேலும் திமுக தலைமை தனது அறிக்கைகள் அனைத்திலும் தவெகவை நேரடியாக விமர்சிக்காமல் மறைமுகமாகவே விமர்சித்து வந்தது.
இதனால் அரசியல் விமர்சகர்கள் தவெகவை கண்டு திமுக அஞ்சுகிறது என்று கூறி வந்தனர். திமுக விஜய்யை நேரடியாக விமர்சித்தால் அவர் மேலும் வளர்ந்து விடுவாரோ என்ற பயத்தினால் தான் மறைமுக விமர்சனங்களை முன் வைத்ததாகவும் சிலர் கூறுகின்றனர். இந்நிலையில் அதனை உறுதி செய்யும் வகையில், திமுக கூட்டணி கட்சியான விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன், விஜய்யின் வருகையால் திமுகவிற்கு தாக்கம் உள்ளது. அதனை விட அதிமுகவிற்கே அதிகளவில் தாக்கம் ஏற்படும் என்று கூறியிருக்கிறார். தவெக-வால் திமுகவிற்கு எந்த வகையிலும் பாதகம் இல்லை என்று திமுக கூறி வர, திருமாவளவனின் இந்த கருத்து கூட்டணி கட்சிகளிடையே சர்ச்சையை கிளப்பியுள்ளது.

