BJP ADMK: சட்டமன்ற தேர்தலுக்காக தேசிய கட்சியான பாஜகவுடன் மாநில கட்சியான அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணி அதிமுக தலைமையில் அமைக்கப்பட்டிருந்தாலும் அதன் செயல்பாடுகளை பார்த்தால் பாஜக தான் இதற்கு தலைமை தாங்குவது போல உள்ளது. அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் ஜெயலலிதா காலத்திலிருந்தே முரண்பாடுகள் உள்ளன. இதையெல்லாம் கருத்தில் கொள்ளாத அதிமுக அதனுடன் நட்பு பாராட்டுவது பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது. ஆளுங்கட்சியான திமுக, பாஜகவிற்கு அதிமுக அடிமையாக உள்ளது என்று வெளிப்படையாக கூறி வந்தது.
இந்த கருத்தை பலரும் முன்வைத்து வந்த நிலையில், அதிமுக கூட்டணி ஒருவேளை சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் தமிழகத்தில் பாஜக ஆட்சி தான் அமைக்கப்படும், அதிமுக ஆட்சி அல்ல என்பதை அமித்ஷா தெளிவுபடுத்தியுள்ளார். பாஜகவின் கொள்கையை ஏற்காத சில தலைவர்கள் இதனை எதிர்த்து வருகின்றனர். பாஜக தமிழகத்தில் நுழைந்தால் அவர்களின் கொள்கைகள், இந்ததுவ வாதம் போன்றவை தமிழக மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று மதிப்பிடப்படுகிறது.
இந்நிலையில் அமித்ஷாவின் இந்த கருத்து அதிமுக தலைமைக்கும், இரண்டாம் கட்ட தலைவர்களும் பேரதிர்ச்சியாக உள்ளது. இதனால் அதிமுக-பாஜக கூட்டணியை விரும்பாத அதிமுக தலைவர்கள் சிலர் இபிஎஸ்க்கு அறிவுரை கூறி பாஜக கூட்டணியிலிருந்து விலகுமாறு கோரிக்கையை முன் வைத்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. இது இன்னும் உறுதி செய்யபடாத நிலையில், அதிமுக பாஜகவிற்கு அடிமையாக இருப்பதை அவர்களின் ஒவ்வொரு அசைவும் உணர்த்தி வருகிறது. இதன் காரணமாக இபிஎஸ்யின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது தற்போதைய கேள்வியாக உள்ளது.

