
ADMK: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னரும், தனது அரசியல் செல்வாக்கை சலனமின்றி காட்டி வருகிறார் மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையன். கடந்த சில மாதங்களாக உட்கட்சி பிரச்சனைகள் வெளிப்படையாகத் தலைதூக்கிய நிலையில், செங்கோட்டையனும் அவரது ஆதரவாளர்களும் கட்சியில் புறக்கணிக்கப்பட்டதாக குற்றம் சாட்டி வந்தனர். இதனைத் தொடர்ந்து, கட்சிக்குள் ஏற்பட்ட மோதல்களின் விளைவாக செங்கோட்டையன் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கு எடுக்கப்பட்டது.
ஆனால், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னரும், ஈரோடு பகுதியில் அவரின் ஆதரவு குறையாமல், மாறாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடைபெற்ற பல நிகழ்வுகளில் செங்கோட்டையனை வரவேற்க மக்கள் திரளாக கூடினர். இதன் மூலம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டாலும் மக்கள் மனதில் நீக்கப்படவில்லை என அவர் நிரூபித்துள்ளார். முன்னதாக கல்வி அமைச்சராகவும், அதிமுகவில் முக்கிய பொறுப்புகளில் இருந்தவருமான செங்கோட்டையன், எப்போதும் தாழ்மையான நடத்தை, நேர்மையான அரசியல், மக்கள் சார்ந்த செயல்பாடுகளால் தனித்த அடையாளம் பெற்றவர்.
இதனால், தற்போது ஈரோடு மாவட்டத்தில் அவர் மீது உள்ள மக்கள் நம்பிக்கை மீண்டும் எழுந்திருக்கிறது. அதிமுக தலைமையுடன் ஏற்பட்ட பிளவு காரணமாக, ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிமுக வாக்கு வங்கியில் மாற்றம் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது. குறிப்பாக, நீண்டகாலம் செங்கோட்டையனுக்கு ஆதரவாக இருந்த குழுவினர், அவரின் பக்கம் செல்வது உறுதியாகும். அதிமுக அணி இப்போது இதனை கவனமாக கண்காணித்து வருகிறது. வரவிருக்கும் தேர்தலில் செங்கோட்டையனின் ஆதரவு எந்த அணிக்கு பலன் தரும் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
