ADMK: அதிமுகவின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான செங்கோட்டையனின் பதவி பறிப்பும், கட்சியிலிருந்து அடியோடு நீக்கியது தொடர்பான செய்தி தான் நேற்று முதல் அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடந்த தேவர் குரு பூஜையில் ஏற்கனவே அதிமுக கட்சியிலிருந்து இபிஎஸ்யால் நீக்கப்பட்ட ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா போன்றோருடன் அதிமுகவின் அடிமட்ட தொண்டனாக இருக்கும் செங்கோட்டையன் ஒன்றாக பயணித்து, முத்துராமலிங்க தேவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது பேசு பொருளானது.
இது மட்டுமல்லாமல் இவர்கள் நால்வரும் ஒன்றாக இணைந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தது சலசலப்பை ஏற்படுத்தியது. இவர்கள் பேசும் போது, துரோகத்தை வீழ்த்துவோம், அம்மா ஆட்சியை மீண்டும் அமைப்போம் என்ற முழக்கத்துடன் பேசி வந்தனர். அதிமுக தலைமைக்கு எதிராக செயல்படுபவர்களுடன் அதிமுக கட்சியிலிருப்பவர்கள் பேச்சுவார்த்தையும், எந்த உறவும் வைத்துக் கொள்ள கூடாது என்பது அதிமுகவின் விதிமுறை. இதனை மீறியதற்காக தான் செங்கோட்டையன் கட்சியிலிருந்து அடியோடு நீக்கப்பட்டார்.
இது குறித்து இன்று காலை செய்தியாளர்களிடம் பேசுவதாக கூறிய செங்கோட்டையன், 54 ஆண்டுகளாக கட்சியிலிருக்கும் என்னை எந்தவித கேள்வியும் இல்லாமல், எனது தரப்பு வாதத்தை கேட்காமல், ஒரு கடிதம் கூட அனுப்பாமல் கட்சியிலிருந்து நீக்கியது ஏற்றுகொள்ள படாது என்றும், இபிஎஸ் அதிமுகவில் இணைவதற்கு முன்பே நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவன். இபிஎஸ்யின் இந்த செயல் என் கண்ணில் கண்ணீரை வர வைக்கிறது என்று கூறியிருந்தார்.
ஆனால் பசும்பொன்னில் இது குறித்து நிருபர் ஒருவர், உங்களை கட்சியிலிருந்து நீக்கி விட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு சந்தோஷப்படுவேன் என்று கூறிய இவர் இன்று இவ்வாறான கருத்தை முன்வைத்துள்ளதால் செங்கோட்டையன் மாற்றி மாற்றி பேசுகிறார் என்று பலர் கூறி வருகின்றனர். மேலும் செங்கோட்டையனின் நிலைப்பாட்டில் மாற்றம் தென்படுகிறது என்பது மற்றொரு தரப்பின் குற்றச்சாட்டாக உள்ளது.

