TVK BJP: தமிழக அரசியல் களம் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி பரபரப்புடன் செயல்பட்டு வருகிறது. கூட்டணி வியூகங்களும், மக்கள் மனதில் தங்கள் கட்சியை நிலை நிறுத்துவதிலும் முன்னணி கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. மேலும் 4 நாட்களுக்கு முன்பு அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் ஒரு அணியாக சேர்ந்து அதிமுக தலைமையை எதிர்ப்பது பெரும் விவாதமாகியுள்ளது. அது மட்டுமல்லாமல் தற்போது புதிதாக, தமிழக வெற்றிக் கழகம் என்னும் புதிய கட்சி உருவாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
விஜய்க்கான இந்த ஆதரவும், ஆர்பரிப்பும் திராவிட கட்சிகளுக்கு சவாலாக அமைந்துள்ளது. இதனால் விஜய்யை கூட்டணிக்குள் சேர்க்க வேண்டுமென அதிமுகவும், பாஜகவும் முயற்சித்து வருகிறது. கரூர் சம்பவம் தொடர்பாக, சட்டசபையில், விஜய்யின் குரலாக அதிமுக ஒலித்தது, விஜய்க்கு உதவுவதாக கூறி பாஜக தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டது போன்ற பல்வேறு விஷயங்கள் விஜய்க்கு ஆதரவாகவே இருந்தது.
ஆனால் விஜய், கொள்கை எதிரி என்று கூறிய பாஜகவுடன் கூட்டணி வைத்தால் தன்னுடைய எதிர்கால அரசியலுக்கு ஆபத்து வரும் என்பதை அறிந்து இவர்களின் கூட்டணிக்கு செவி சாய்க்காமல் உள்ளார். இதனால் விஜய் தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார் என்று பலரும் கூறி வந்தனர். ஆனால் அதில் புதிய திருப்பமாக, விஜய் ஒரு மாற்று வியூகத்தை கையில் எடுத்திருப்பதாக தெரிகிறது.
தேர்தல் நேரத்தில், தனித்தோ அல்லது தவெக கொள்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சியுடனோ கூட்டணி அமைத்து, தேர்தல் முடிந்த பின்னர், பாஜக கூட்டணியில் இணைந்து செயல்படலாம் என்று திட்டம் தீட்டி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் சமயத்தில் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தால், எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்று விடலாம் என்று விஜய் யூகிப்பதாக தகவல் தெரிவிக்கிறது.

