PMK: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சிகளனைத்தும், தேர்தல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு வரும் வேளையில் பாமகவில் மட்டும் தந்தைக்கும், மகனுக்கும் இடையில் மோதல் போக்கு தீவிரமடைந்து வருகிறது. இதனால் தனது மகன் என்று கூட பாராமல் அன்புமணியின் தலைவர் பதவியை பறித்தார் ராமதாஸ். ஆனால் தேர்தல் ஆணையமோ, தலைவர் பதவி மற்றும், சின்னத்திற்கு உரியவர் அன்புமணி தான் என்று தீர்ப்பளித்தது. இதனை சட்ட ரீதியாக எதிர் கொள்வதாக ராமதாஸ் அறிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து கட்சியின் முக்கிய பதிவியிலிருக்கும் ஒருவரது மகனுக்கு இளைஞரணி தலைவர் பதவியை வழங்கி, அன்புமணியை மேலும் கோபப்படுத்தினர். மேலும் தனது மகள் காந்திமதிக்கு செயல் தலைவர் பதவியும் வழங்கினார். இது பேசுபொருளான நிலையில், ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணி கட்சியிலிருந்து நீக்குவதும், அன்புமணி ஆதரவாளர்களை ராமதாஸ் கட்சியிலிருந்து நீக்குவது போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில், பாமக இரண்டாக பிரிந்து இருப்பதால், இவர்கள் எந்த அணியில் இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
அன்புமணி ஒரு புறம் அதிமுகவுடன் கூட்டணியில் இணைவதற்கான வேலைபாடுகளை செய்து வந்த நிலையில், ராமதாஸ் திமுக உடன் நெருக்கம் காட்டி வந்தார். இந்த இக்கட்டான நிலையில், பாமகவை சேர்ந்த எம்எல்ஏ அருள் கூட்டணி குறித்த ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம், அன்புமணி, ராமதாஸ் இருவருமே ஒரே கூட்டணியில் கூட இணையலாம் என்று கூறியுள்ளார். இதனால் பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் உள்ள மோதல் முடிவுக்கு வந்து விட்டதாக பாமக வட்டாரங்கள் கூறுகின்றன. இவர்கள் இணைய போகும் கூட்டணி எது என்பது பற்றிய விவாதமும் தற்போது சூடுபிடித்துள்ளது.

