DMK TVK: தமிழக அரசியலில் தற்போது ஒரு புதிய அரசியல் சக்தி உருவாகியுள்ளது. திமுக அதிமுக என திராவிட கட்சிகள் பிரிந்நதிலிருந்தே திமுகவின் ஆட்சியை எதிர்க்கும் வலிமையான அமைப்பு அதிமுகவாகவே இருந்து வந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பின், அந்த கட்சியின் ஒருங்கிணைப்பும், மக்கள் மனதில் அதன் தாக்கமும் சற்றே மங்கியிருந்தது. இந்நிலையில் விஜய் தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் அமைப்பாக மாற்றியிருப்பது, மாநில அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
குறிப்பாக இளைஞர்கள் மற்றும் நடுத்தர வர்க்க வாக்காளர்களிடையே அவருக்கு உள்ள தாக்கம் திமுகவிற்கு நேரடி சவாலாக மாறி வருகிறது. இதுவரை திமுகவிற்கான எதிர்ப்பாக அதிமுக மட்டுமே இருந்த நிலையில், தற்போது அதனை விஜய்யும் பகிர்ந்து கொள்ளும் நிலை உருவாகி உள்ளது. முன்னதாக, திமுகவின் மீது அதிருப்தி கொண்ட வாக்காளர்கள் பெரும்பாலானோர் அதிமுகவையே தேர்வு செய்தனர். ஆனால் தற்போது, அதே வாக்காளர்கள் விஜய்யின் புதிய அரசியல் இயக்கத்தை மாற்று சக்தியாக காண்கிறார்கள்.
இதனால், திமுகவை எதிர்ப்பதற்க்கான பலம் அதிமுகவிற்கு மட்டுமல்ல, விஜய்க்கும் சொந்தமானது என்ற எண்ணம் வலுப்பெற்று வருகிறது. அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் சமிக்ஞைகள் உருவாகும் நிலையில், விஜய்யின் அடுத்தடுத்த அரசியல் நடவடிக்கைகள் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் சமமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அரசியல் வல்லுநர்களின் கருத்தாகும். விஜய்யின் இந்த அசுர வளர்ச்சி திமுகவிற்கு எவ்வாறான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

