PMK: பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. இதனால் தனது மகன் அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து நீக்கிய ராமதாஸ், தனது மூத்த மகள் காந்திமதியை செயல் தலைவர் பதவியில் அமர்த்தினார். தந்தைக்கும் மகனுக்கும் ஏற்பட்ட பிரிவால் பாமக இரண்டாக பிரிந்துள்ளது. மேலும் கட்சியின் தொண்டர்கள் யார் பக்கம் செல்வதென்று தெரியாமல் திணறி வருகின்றனர். பாமக ஒன்றிணைந்தால் தான் சட்டமன்ற தேர்தலில் வெல்ல முடியும் என்ற கருத்தும் வலுப்பெற்று வருகிறது.
இந்நிலையில் ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணி பதவியிலிருந்து நீக்குவதும், அன்புமணி ஆதரவாளர்களை ராமதாஸ் பதவியிலிருந்து நீக்குவது போன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. அந்த நிலை மேலும் வலுப்பெற்று ராமதாசின் தீவிர ஆதரவாளரான சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள், ஆத்தூர் அடுத்த வடுகம்பாடி பகுதியில் துக்க நிகழ்விற்காக சென்று விட்டு வீடு திரும்பிய போது, அவரது காரை வழி மறைத்து, சுமார் 50 க்கும் மேற்பட்டோர் தாக்குதல் நடத்தினர்.
இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு காரணம் அன்புமணியாக இருக்கலாம் என்ற சந்தேகம் நிலவியது. அதனை உறுதி செய்யும் விதமாக, எம்எல்ஏ அருள் திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார். இந்த தாக்குதலுக்கு காரணம் அன்புமணியின் ஆதரவாளர்கள் தான் என்றும், பாமக பிரிந்து, முதல் பொதுக்குழு கூட்டியதிலிருந்தே, அன்புமணி ஆதரவாளர்கள் என்னை மிரட்டி வருகின்றனர் என்று கூறியிருக்கிறார். ஏற்கனவே பாமகவில் பல்வேறு பிரச்சனைகள் நிலவி வரும் நிலையில், இது மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது.

