TVK: தமிழக அரசியலில் தற்போது மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம். இந்த கட்சி தனது முதல் சட்டமன்ற தேர்தலிலேயே எதிர்க் கட்சியாக மாறும் வாய்ப்பு உள்ளது என்று பலரும் கூறி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக மாநிலம் முழுவதும் விஜய்யின் கூட்டங்களில் காணப்படும் மக்கள் திரள், அவரின் அரசியல் பிரச்சாரம் எதிர்பார்த்ததை விட பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்திய விஜய், நேற்று தவெக சார்பில் நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தவெக தனித்து களம் காண போகிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். விஜய் தனித்து நிற்பது திமுகவுக்கு எதிரான வாக்குகளை பிரிக்கும் என சிலர் கூறினாலும், பல்வேறு கருத்துக்கணிப்புகள் இதை மாறுபட்ட கோணத்தில் காட்டுகின்றன. அதாவது, மக்கள் விருப்பம் தவெகவை ஒரு மாற்று அரசியல் கட்சியாக பார்க்கத் தொடங்கி இருப்பதாக தெரிகிறது. இதுவரை திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சியில் இருந்த சூழலில், விஜய்யின் புதிய அரசியல் முயற்சி அந்த இரட்டையாட்சிக்கும் சவாலாக மாறியுள்ளது.
அதிமுகவும் பாஜகவும் இதனை மிகுந்த கவனத்துடன் நோக்கி வருகின்றன. குறிப்பாக, பாஜக-திமுக எதிர்ப்பு வாக்குகளை ஒருங்கிணைக்க தவெக ஒரு புதிய சக்தியாக உருவெடுத்துள்ளது. இதேவேளை, திமுகவின் கூட்டணி கட்சிகள், விஜய்யின் வேகமான எழுச்சியால் தேர்தல் முடிவுகளில் ஏற்படும் விளைவுகளை மதிப்பீடு செய்து வருகின்றன. மொத்தத்தில், முதல் தனித்துப் போட்டியிலேயே எதிர்க்கட்சிப் பட்டியலில் தவெகவின் பெயர் சேர வாய்ப்புள்ளது என்ற கருத்து நிலவுகிறது. இந்த அரசியல் திருப்பம், தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

