TVK AMMK: அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு சிறிய கட்சிகள் தொடங்கி திராவிட கட்சிகள் வரை தங்கள் வியூகங்களை வகுக்க தொடங்கி விட்டன. மக்களை சந்திக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்று பயணத்தையும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சார பயணத்தையும் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் திமுகவின் கூட்டணி கட்சிகள் ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகள் என வலியுறுத்து வரும் வேளையில், அதிமுகவில் அதனை விட இரண்டு மடங்கு வேகமாக கட்சியே பல அணிகளாக பிரிந்து இருக்கிறது. அதிலும் அதிமுகவின் முகமாக அறியப்பட்ட செங்கோட்டையனின் பதவி பறிக்கப்பட்டது பேசு பொருளானது. இதனை தொடர்ந்து, செங்கோட்டையன் அதிமுக தலைமைக்கு எதிராக உள்ளவர்களுடன் சேர்ந்து பயணித்ததால் அவர் கட்சியிலிருந்து அடியோடு நீக்கப்பட்டார்.
இந்த சம்பவம் அரங்கேறும் முன்பே டிடிவி தினகரன் ஒரு மாபெரும் கூட்டணியில் நாங்கள் இணைவோம் அது வெற்றிக் கூட்டணியாக மாறும் என்று தொடர்ந்து கூறி வந்தார். அது விஜய் தலைமையிலான கூட்டணியா என்று சந்தேகம் எழுந்த போது அதனை பொறுத்திருந்து பார்க்குமாறு தினகரன் தெரிவித்தார். இது இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், தினகரன் கூறியது விஜய் உடனான கூட்டணி தான் என்பதை அவர் மறைமுகமாக உணர்த்தியுள்ளார். இது குறித்து பேசிய அவர், தற்போதைய நிலைமையை பார்த்தால் திமுகவிற்கு-தவெகவிற்கும் தான் போட்டி என்பது போல உள்ளது என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், யாரும் எதிர்பார்த்திராத கூட்டணி அமையும், தமிழகத்தில் கூட்டணி கணக்குகள் எந்த நேரத்தில் எப்படி வேண்டுமானலும் மாறலாம் என்று தெரிவித்திருந்தார். இவரின் இந்த கருத்து விஜய் உடனான கூட்டணியை மறைமுகமாக கூறியது போல உள்ளது என அனைவரும் கூறி வருகின்றனர். ஏனென்றால் விஜய் அதிமுக உடன் கூட்டணி இல்லை என்பதை பொதுக்குழு கூட்டத்தில் உறுதிப்படுத்திய பிறகு இத்தனை நாட்கள் கழித்து தினகரன் இந்த கருத்தை கூறியதால் பலருக்கும் இது விஜய் உடனான கூட்டணியாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

