ADMK DMK TVK: 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாநில அரசியல் மீண்டும் பழைய இரு துருவங்களான திமுக மற்றும் அதிமுகவை மையமாக கொண்டு நகரும் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. அதிமுக, கடந்த முறை நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவை மீட்டெடுக்க முயற்சிக்கிறது. அதனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கட்சி, பல்வேறு கூட்டணி கட்சிகளுடன் மீண்டும் வலுவான தளத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
மறுபுறம், திமுக அரசு மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் நிதி உதவித் திட்டங்கள் வழியாக மக்களின் ஆதரவை பெற்று மீண்டும் ஆட்சிக்கு வர முயல்கிறது. இந்தச் சூழலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் புதிய சக்தியாக வெளிவந்தாலும், தனித்து நிற்கும் முடிவு அவருக்கு பெரும் சவாலாக மாறலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். விஜய் கட்சியின் சமூக நடவடிக்கைகள் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தாலும், ஒரு முழுமையான கட்சி அமைப்பை உருவாக்க நேரம் எடுக்கப்படும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
விஜய் தனியாக போட்டியிடும் ஆளுமை அவரிடம் இருந்தாலும் கட்சி அமைப்பு இல்லாததால் வெற்றி பெறுவது கடினம் என்ற கருத்து நிலவுகிறது. இதனால் 2026 தேர்தல் மீண்டும் திமுக-அதிமுக நேரடி மோதலாக மாறும் வாய்ப்பு அதிகம் உள்ளது என மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார். ஆனால், விஜய் உள்ளிட்ட புதிய சக்திகள் மக்கள் மனநிலையை மாற்றக் கூடியதா என்பது இன்னும் ஒரு கேள்வி குறியாகவே உள்ளது.

