ADMK: முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், இரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசின் அனுமதி பெற 19 மாதங்கள் தாமதமானதற்கு காரணம் என்ன என்று விளக்கம் அளிக்கும்படி, சென்னை உயர்நீதிமன்றம் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் கேள்வி எழுப்பியுள்ளது. முன்னாள் அமைச்சர் வேலுமணி, அதிமுக ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோது, சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கான ஒப்பந்தங்களில் 98.25 கோடி ரூபாய் மதிப்பில் முறைகேடுகள் நடந்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்தது.
இதற்கான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்த போதும், அதனை நடைமுறைப்படுத்தவில்லை என அறப்போர் இயக்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, துறையின் தரப்பில், மத்திய அரசின் கோரிக்கையின்படி 12 ஆயிரம் பக்க ஆவணங்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு நவம்பர் 7ஆம் தேதி அனுப்பப்பட்டதாகவும், மத்திய பணியாளர் நலத் துறை அவற்றை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு எதிராக நீதிபதி, முன்னாள் அமைச்சர் மற்றும் நான்கு அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர கடந்த பிப்ரவரி மாதத்திலேயே அனுமதி கிடைத்த நிலையில், இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அனுமதி பெற 19 மாதங்கள் ஏன் எடுத்தது? என கேள்வி எழுப்பினார். மேலும், அடுத்த தேர்தல் நெருங்கி விட்டது. ஊழல் இல்லாத அரசு வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு. அமைச்சர்கள், அதிகாரிகள் மீது உள்ள வழக்குகளில் தாமதம் மக்கள் நம்பிக்கையை இழக்கச் செய்யும், எனவும் நீதிபதி எச்சரித்தார். தாமதத்திற்கான விளக்கம் அடங்கிய அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, நீதிமன்றம் விசாரணையை நவம்பர் 24க்கு ஒத்திவைத்தது.

