ADMK TVK:சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில், மாநில கட்சிகளனைத்தும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. திராவிட கட்சிகளான அதிமுகவும், திமுகவும் வழக்கம் போல போட்டி போட தொடங்கி விட்டன. இந்நிலையில் திமுகவிற்கு புதிய எதிரியாக உருவெடுத்துள்ளது தவெக. விஜய் தனது முதல் மாநாட்டிலேயே, திமுக தான் தவெகவின் அரசியல் எதிரி என்று கூறியதால், இது அதிமுகவிற்கு சாதகமாகிவிட்டது. ஜெயலலிதா இறந்த பிறகு இபிஎஸ் அதிமுக தலைவராக பதவியேற்றதிலிருந்தே அக்கட்சி வலுவிழந்து காணப்படுகிறது. இதனால் விஜய் கூட்டணி அதிமுகவிற்கு பலம் சேர்க்கும் என்றுணர்ந்த இபிஎஸ் தவெகவை அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வந்து விடலாமென திட்டம் தீட்டினார். ஆனால் இபிஎஸ்யின் எதிர்ப்பார்ப்பு அத்தனையும் ஏமாற்றத்தில் முடிந்தது.
விஜய் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு மறுப்பு தெரிவித்தும் அதிமுகவும், பாஜகவும் அவரை விடாமல் துரத்தி வருகின்றன. இந்நிலையில் நேற்று தமிழக பாஜக மகளிரணி தலைவராக இருக்கும் வானதி ஸ்ரீநிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், விஜய் திமுக ஆட்சியை அகற்ற வேண்டுமென கூறுகிறார். அப்படி இருக்க அவரால் எவ்வாறு தனியாக அதனை செயல்படுத்த முடியும். ஒன்று சேர், ஒன்று சேர் என்று சொல்லும் விஜய், தவெக யாருடன் கூட்டணி அமைக்க போகிறது என்பதை அவர் தான் சொல்ல வேண்டுமென கூறினார். இவரின் இந்த கருத்து பாஜக-அதிமுக, தவெகவை கூட்டணிக்குள் கொண்டு வரும் வரை ஓயாது என்பதை நிரூபித்தது.
தற்போது அதனை உறுதிப்படுத்தும் வகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், ஜனவரி மாதம் வரை பொறுமையாக இருங்கள் மெகா கூட்டணி அமையும், சட்டமன்ற தேர்தலுக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுக கூட்டணி அமைப்பதை ஊடகங்களிடம் கூற முடியாது, 2026 தேர்தலுக்கு முன் அதிமுக தலைமையிலான கூட்டணி முடிவு செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார். இவரின் இந்த கூற்று விஜய்யின் தவெகவை கூட்டணியில் சேர்ப்பதற்கான முயற்சியாக தெரிகிறது என்று பலரும் சந்தேகிக்கின்றனர். மேலும் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்பதை ஆர்.பி உதயகுமார் திட்டவட்டமாக கூறியிருக்கிறார். விஜய் அதிமுகவுடன் கூட்டணி இல்லையென்பதை மேடையில் அறிவித்தும் அதிமுக, விஜய்யை விடாமல் துரத்துவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

