TVK MDMK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், முக்கிய கட்சிகளில் உள்ள அமைச்சர்களும், நிர்வாகிகளும், வேறு கட்சியில் இணைந்து வருவது தற்போது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதற்காக மாவட்டம் தோறும், மாற்று கட்சியை சேர்ந்தவர்களை தங்களது கட்சியில் இணைக்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், அதிமுகவிலிருந்து, அன்வர் ராஜா, மைத்ரேயன், மருது அழகு ராஜா, மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட பலரும் திமுகவில் இணைந்து அதற்கு மேலும் பலத்தை கூட்டியுள்ளனர்.
இந்நிலையில் அண்மையில் மதிமுகவிலிருந்து விலகிய அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் சமீப காலமாகவே விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். இதன் காரணமாக தான், சென்னையில் நடைபெற்ற திமுகவின் 75 வது அறிவு திருவிழாவிற்கு எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று சமீபத்திய பேட்டியில் கூறியிருக்கிறார். தொடர்ந்து பேசிய அவர், இனிமேல் திமுகவுக்கு அதிமுக போட்டியாக இருக்காது, தவெக தான் போட்டியாக இருக்கும்.
இந்த உண்மையை தான் நான் சொன்னேன் என்று கூறினார். நாஞ்சில் சம்பத் தொடர்ந்து தவெகவுக்கு ஆதரவு அளிப்பதை பார்த்தால் கூடிய விரைவில் இவர் தவெகவில் இணையும் வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. புதிதாக கட்சி துவங்கி இருக்கும் விஜய்க்கு இவர் கட்சியில் இணைந்தால் அது தவெகவுக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இவரின் இந்த இணைவு மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோவிற்கு பேரதிர்ச்சியாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

