ADMK PMK: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதற்கான ஆயத்த பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. ஆளுங்கட்சியான திமுக மாற்று கட்சியினரை தம் கட்சியில் இணைக்கும் பணியினையும், 5 வருடங்களில் மக்களுக்கு செய்த நன்மைகளையும் பட்டியலிட்டு அதனை மக்கள் மனதில் பதிய வைப்பதற்க்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. ஆனால் அதிமுக, பாமக போன்ற கட்சிகளில் ஆட்சி அதிகாரமும், தலைமை பயமும் தலைவிரித்தாடுகிறது என்றே சொல்லலாம். அதிமுகவில் கூட கட்சி பொறுப்பு யாரிடத்தில் உள்ளது என்ற தெளிவு உள்ளது. ஆனால் பாமகவில் அதிலும் ஒரு சிக்கல் நீடிக்கிறது.
தந்தைக்கும் மகனுக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் சிதறுண்ட பாமக இரண்டு திசையில் செயல்பட்டு வருகிறது. இந்த சமயத்தில், பாமக யாருடன் கூட்டணி அமைக்கும், உண்மையான பாமக யாரிடம் உள்ளது என்பது போன்ற கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன. கட்சியின் நிறுவனர் ராமதாஸ் திமுகவிற்கு ஆதரவு செலுத்தி வருவதால் அவர் அந்த கூட்டணிக்கு செல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது என்று ராமதாசின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். மகன் அன்புமணி அதிமுக பக்கம் நிற்பதை கண் கூடாக பார்க்க முடிகிறது.
இது இன்னும் அதிகார பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், அன்புமணி இபிஎஸ்யிடம் ஒரு நிபந்தனை விதித்துள்ளாராம். அது என்னவென்றால், பாமக-அதிமுக கூட்டணி உறுதி செய்யப்பட வேண்டுமென்றால் பாமகவிற்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகளையும், ஆட்சியில் பங்கையும் தர வேண்டுமென்று கூறியுள்ளதாக அன்புமணியின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அதிமுக கூட்டணியிலிருக்கும் பாஜக கொங்கு மண்டலத்தை கேட்டு வலியுறுத்தி வருகிறது என்று கூறப்படும் சமயத்தில் அன்புமணியின் இந்த நிபந்தனை இபிஎஸ்க்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

