ADMK TVK: தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது முதல் இன்று வரை திமுகவிற்கு எதிரி தவெக தான் என்று விஜய் கூறி வருகிறார். திமுகவும் இதுவரை அதிமுகவை மட்டுமே எதிரி பட்டியலில் வைத்திருந்த நிலையில் தற்போது புதிதாக தவெகவையும் இணைத்து விட்டதை கண் கூடாக பார்க்க முடிகிறது. ஆனால் இதனை அதிமுகவை சேர்ந்த யாரும் ஒப்புக் கொள்ளவில்லை. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் எத்தனை புதிய கட்சிகள் வந்தாலும், அதிமுகவுக்கும், திமுகவுக்கும் தான் போட்டி என்று கூறியிருந்தார்.
இதனை பல்வேறு அரசியல் நிபுணர்களும் கூறி வந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் அதனை வெளிப்படையாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக தலைமையின் கீழ் தவெக கூட்டணி அமைக்காது, விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என்று தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டதிலிருந்தே அதிமுகவை சேர்ந்தவர்கள் விஜய்யை நேரடியாக விமர்சித்து வரும் வேளையில், ராஜேந்திர பாலாஜி அவர்கள், தமிழகத்தை பொறுத்தவரை அதிமுகவும், திமுகவும் தான் பலமான கட்சிகள்.
நாங்கள் பார்த்து கொள்கிறோம். வேறு கட்சிக்கு இங்கு வேலை கிடையாது. ஒன்று அதிமுக ஆள வேண்டும் அல்லது திமுக வாழ வேண்டும். அதிமுகவா திமுகவா என்பது மக்களின் முடிவு என்று கூறியிருக்கிறார். இவரின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் மிகவும் கவனம் பெற்றுள்ளது. மேலும், திமுகவிற்கு மாற்று அதிமுக மட்டும் தான் என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல், திமுகவிற்கு எதிரி தவெக தான் என்று கூறி வந்த விஜய்க்கு இது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது.

