PMK: இன்னும் 6 மாதத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்காக கட்சிகளனைத்தும் முழு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் பாமகவில் மட்டும் தந்தைக்கும், மகனுக்கும் நடுவில் நிலவும் பிரச்சனை தீவிரமாகி கொண்டே செல்கிறது. இதன் காரணமாக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து நீக்கினார். ஆனால் தேர்தல் ஆணையமோ கட்சியின் தலைவர் மற்றும் சின்னத்திற்கு உரியவர் அன்புமணி தான் என்று தீர்ப்பளித்தது. இதனை சட்ட ரீதியாக எதிர்கொள்வதாக அறிவித்திருந்தார் ராமதாஸ்.
இதற்கடுத்து, ராமதாசின் ஆதரவாளர்களை அன்புமணி நீக்குவதும், அன்புமணியின் ஆதரவாளர்களை ராமதாஸ் நீக்குவதும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனால் உண்மையான பாமக யார் என்பது பெரிய கேள்வியாக இருந்தது. மேலும் பாமக இரண்டாக இருப்பதால் அது யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதும் கேள்விக்குறியாக இருந்தது. இந்நிலையில், அன்புமணி பேசிய பேச்சு ராமதாசுக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.
அன்புமணி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய அன்புமணி, என்னை கட்சியின் தலைவராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது, சின்னத்தையும் எனக்கு ஒதுக்கி விட்டனர், யாராலும் எதுவும் செய்ய முடியாது. இதனை காரணமாக வைத்து நீதிமன்றம் சென்றாலும் எதுவும் நிகழ போவதில்லை, அதனால் அதை பற்றி பேச வேண்டிய அவசியமில்லை என்று கூறினார். இவரின் இந்த கருத்து பாமகவில் எல்லாமே நான் தான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இதனை ராமதாசின் ஆதரவாளர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

