ADMK DMK TVK: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சமயத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. திராவிட கட்சிகளான அதிமுகவும், திமுகவும் எப்போதும் போல தீவிரம் காட்ட ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில், தவெக என்னும் புதிய கட்சி தொடங்கப்பட்டு புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது. விஜய் தனது முதல் மாநாட்டிலேயே திமுக தான் தவெகவின் அரசியல் எதிரி என்று கூறினார். அப்போது முதல் இப்பொது வரை விஜய் அந்த நிலையிலிருந்து மாறவில்லை.
அதேபோல் திமுகவும் இத்தனை வருடங்களாக அதிமுகவை மட்டுமே எதிரி என்று கூறி வந்த நிலையில், தற்போது அந்த வரிசையில் விஜய்யையும் இணைத்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக திமுக தலைவர் ஸ்டாலின் பல்வேறு இடங்களில் புதிய எதிரிகள், பழைய எதிரிகள் என்று கூறியுள்ளார். மேலும் சில இடங்களில் விஜய் பற்றிய கேள்வியை அறவே தவிர்த்துள்ளார். இதுவே திமுக தவெகவை எதிரி பட்டியலில் சேர்த்து விட்டது என்பதற்கு உதாரணமாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில் இதனை மேலும் வலுப்படுத்தும் விதமாக முதல்வர் ஸ்டாலின் ஒரு கருத்தை கூறியுள்ளார். கொளத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக முகவர்கள் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், எஸ்.ஐ.ஆர் எதிர்ப்பை கடுமையாக வெளிபடுத்தியதுடன், அதிமுக எதிர்கட்சி மட்டுமல்ல, உதிரி கட்சியாக கூட இருக்க முடியாது என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து, அதிமுகவை எதிரி பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு அந்த இடத்திற்கு தவெகவை அமர்த்திவிட்டது என்பதை நிரூபிக்கிறது என்று அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

