TVK AMMK: தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை வருடங்களுக்கு மேலான நிலையில், அதற்கான ஆதரவு பெருகிய வண்ணம் உள்ளது. இதனை கண்ட கட்சிகள் அவரை கூட்டணியில் சேர்க்க முயற்சித்து வருகின்றன. ஆனால் விஜய் தவெக தலைமையில் தான் கூட்டணி, நான் தான் முதல்வர் வேட்பாளர் என்று தீர்மானம் நிறைவேற்றி விட்டார். இதனால் அதிமுக-பாஜக என்ன செய்வதென்று தெரியாமல் அடுத்த கட்ட ஆலோசனையில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்நிலையில், அதிமுகவிலிருந்து பிரிந்த நால்வர் அணியை சேர்ந்தவர்கள் நாங்கள் இடம் பெரும் கூட்டணி தான் வெற்றி பெறும், தவெகவுக்கும், திமுகவுக்கும் தான் போட்டி, என்று கூறி வருகின்றனர்.
நால்வர் அணியில் இருக்கும் செங்கோட்டையன், சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் போன்றோர் அரசியலில் நல்ல அனுபவம் வாய்ந்தவர்கள். இதனால் இவர்கள் இணையும் கூட்டணி வெற்றி பெற வாய்ப்புள்ளது என அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், இன்று சென்னை அடையாரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, நாங்கள் இடம் பெரும் கூட்டணி வெற்றி பெரும் என்று மீண்டும் வலியுறுத்தி கூறி இருக்கிறார். மேலும் செங்கோட்டையன், சசிகலா, ஓபிஎஸ்யிடம் பேசி கொண்டு தான் இருக்கிறேன் என்றும் கூறினார்.
இவர்கள் நால்வரும் திமுகவை கடுமையாக எதிர்த்து வருவதால் அதனுடன் கூட்டணி சேர வாய்ப்பில்லை. அதனால் விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்காத, விஜய் தலைமையில் கூட்டணி அமைக்காத இபிஎஸ்க்கு எதிராக விஜய் உடன் கூட்டணி அமைப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் தான் டிடிவி தினகரன் திமுகவிற்கும், தவெகவிற்கும் போட்டி என்று கூறியிருக்கிறார் என்று பலரும் கூறி வருகின்றனர். மேலும் இபிஎஸ்யை முதல்வர் வேட்பாளராக ஏற்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் தினகரன் விஜய்யை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த சம்மதம் தெரிவித்து விட்டார் என அமமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

