CONGRESS DMK: 2026 சட்டமன்ற தேர்தலை எதிர் நோக்கி தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. சட்டமன்ற தேர்தல் என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இதற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக அரசியல் அரங்கில் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறி விட்டன. அதில் முக்கியமாக விஜய்யின் வருகை, திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார், அதிமுகவில் ஏற்பட்ட பிரிவு போன்றவை குறிப்பிடத்தக்கது.
மற்ற கட்சியின் கூட்டணியை விட தவெக உடன் யார் கூட்டணி அமைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு தான் அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. அதிமுக-பாஜக கூட்டணியை நிராகரித்த விஜய் நால்வர் அணியுடன் கூட்டணி அமைப்பார் அல்லது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் விஜய்க்கு மிக நெருக்கம் என்பதால் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பார் என்று பல்வேறு வியூகங்கள் எழுந்தன.
மேலும் திமுக கூட்டணியிலிருக்கும் காங்கிரஸ் தேர்தல் நெருங்கும் சமயத்தில் திமுக தலைமையிடம் அதிக தொகுதிகள், ஆட்சியில் பங்கை கேட்டு வலியுறுத்தி வந்தது, விஜய் இருக்கும் தைரியத்தில் தான் என கருதப்பட்ட நேரத்தில், அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் மாணிக்கம் தாகூர்.
இது குறித்து பேசிய அவர், தவெக உடன் காங்கிரஸ் கூட்டணி என்பது வெறும் ஊகங்களாக இருக்கலாம், எங்களைப் பொறுத்தவரை, திமுக-வுடனான இண்டியா கூட்டணி பலமாக இருக்கிறது என்று கூறியுள்ளார். இவரின் இந்த பதில் தவெகவுடன், காங்கிரஸ் கூட்டணி இல்லை என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது.

