NJP TVK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்க உள்ளது. அதற்காக தமிழகத்திலுள்ள சிறிய கட்சிகள் தொடங்கி திராவிட கட்சிகள் வரை தங்களது தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. மேலும் விஜய்யின் தவெகவும் அதன் பணிகளில் வேகமேடுத்துள்ளது. எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் கிடைக்காத ஆதரவு தவெகவுக்கு கிடைத்தது மாநிலம் தொடங்கி தேசியம் வரை வியப்பில் ஆழ்த்தியது. இதனால் அனைத்து கட்சிகளும் விஜய்யை தங்கள் கூட்டணியில் சேர்க்க முந்தியடித்து கொண்டு சென்றன.
அதிலும் அதிமுக- பாஜகவும் இதனை நேரடியாகவே செய்து வந்தது அனைவரையும் வியப்படைய செய்தது. ஆனால் விஜய் கொள்கை எதிரியான பாஜக உடன் கூட்டணி இல்லை, பாஜக உடன் கூட்டணியில் இருக்கும் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்பதை தெளிவாக கூறி விட்டார். இதனால் பாஜகவை சேர்ந்தவர்களும், அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களும் தவெகவை மிகவும் இழிவாக பேசியதை கண் கூடாக பார்க்க முடிந்தது. அதிலும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விஜய் கட்சியெல்லாம் ஒரு கட்சியா என்று கூறியது அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், NDA கூட்டணியிலிருக்கும் புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகத்தின் கருத்து அரசியல் களத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் கட்சியை குறித்து அவர் கூறும் போது, புதிய நீதி கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே தொடரும் என்று கூறிய அவர், தவெகவுக்கு ஒவ்வொரு தொகுதியிலும் 25,000 முதல் 50,000 வாக்குகள் உள்ளன. வலுவான வேட்பாளர் போட்டியிட்டால் வெற்றி பெறலாம் என்று அவர் தெரிவித்தார். இவரின் இந்த கருத்து, பாஜகவை கொள்கை எதிரி என்று கடுமையாக விமர்சித்து வரும் விஜய்க்கு ஆதரவாக இருப்பதால் பாஜகவை சேர்ந்தவர்கள் இவரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

