ADMK TVK: 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் களம் பரபரக்க தொடங்கியுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் அதன் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றன. ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக இம்முறையும் ஆட்சியை பிடித்து வெற்றி பெற வேண்டுமென்றும், ஜெயலலிதா இறந்ததிலிருந்தே தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுக இந்த முறையாவது வெற்றி பெற்று ஆட்சி கட்டிலில் அமர்ந்து அதிமுகவின் செல்வாக்கை நிலை நாட்ட வேண்டுமென்றும் போராடி வருகிறது. மேலும் விஜய்யின் தவெகவும் திமுகவை வீழ்த்த வேண்டுமென்ற நோக்கில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
மூன்றாம் நிலை கட்சிகளின் நிலைப்பாடு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் விஜய் திமுகவை பிரதான அரசியல் எதிரி என்று கூறியது, அதிமுகவிற்கு சாதகமாகி விட்டது. இதனால் விஜய்யை அதிமுக கூட்டணியில் சேர்த்து திமுகவை தோற்கடிக்கலாம் என்று இபிஎஸ் நினைத்த சமயத்தில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார் விஜய். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் அதிமுகவினர் திணறி வருகின்றனர்.
தவெக, அதிமுக உடன் கூட்டணி அமைக்காமல் இருக்க இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் அதிமுக, பாஜக உடன் கூட்டணி அமைத்திருப்பது. தவெகவின் கொள்கை எதிரியான பாஜக உடன் கூட்டணியிலிருக்கும் எந்த கட்சியுடனும் தவெக கூட்டணி அமைக்காது என்று தவெகவின் இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இவரின் இந்த கருத்து பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறினால் அதிமுக- தவெக கூட்டணி உறுதியாகும் என்று அவர் மறைமுகமாக கூறியதை போல உள்ளது என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

