ADMK TMC: தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்காக கட்சிகளனைத்தும் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன. கூட்டணி வியூகங்களும், தொகுதி பங்கீடும் சூடு பிடிக்க தொடங்கியுள்ள நிலையில் மூன்றாம் நிலை கட்சிகளை தங்களது கட்சியில் இணைக்கும் பணியையும் திராவிட கட்சிகள் முன்னெடுத்துள்ளன. அந்த வகையில், அதிமுக-பாஜக கூட்டணி ஒரு வருடத்திற்கு முன்பே அறிவிக்கப்பட்ட நிலையில், திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளை வலுவாக அமைக்க முயற்சித்து வருகிறது.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமாகா தலைவர் ஜி.கே. வாசன் சேலத்தில் சந்தித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜி. கே. வாசன், இது அரசியல் ரீதியான சந்திப்பு என்று கூறினார். மேலும் அதிமுக, பாஜக போன்ற ஒத்த சிந்தனையுள்ள கட்சிகள் ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தமாகா அதிமுக கூட்டணியில் உள்ள நிலையில், இவரின் இந்த சந்திப்பு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதுவரை கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கப்படுவது குறித்து அதிமுக எந்த முடிவையும் எடுக்கவில்லை. எனவே ஜி.கே வாசனின் இந்த சந்திப்பு சட்டமன்ற தேர்தலில் தமாகாவிற்கு இரட்டை இலக்க தொகுதிகளை ஒதுக்க வேண்டுமென்று அவர் இபிஎஸ்யிடம் கோரிக்கை விடுத்தார் என்று தமாகா வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் ஒத்த சிந்தனையுள்ள கட்சிகள் ஒன்றாக இணைய வேண்டுமென்ற அவரது கோரிக்கை விஜய்யின் தவெகவை நேரடியாக கூட்டணிக்கு அழைக்கிறது என்ற கருத்தும் வலுப்பெறுகிறது.

