ADMK TVK: தமிழக அரசியல் 2026 தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறது. இந்த சமயத்தில் பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. யார், யாருடன் கூட்டணி அமைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இப்போது வரை ஓயவில்லை. தற்சமயம் அதிமுக-பாஜக கூட்டணி மட்டுமே உறுதியான நிலையில், திமுக கூட்டணியில் பல்வேறு சலசலப்பு நிலவி வருவதால் அந்த கூட்டணி எப்போது வேண்டுமானாலும் முறியும் நிலையில் உள்ளது. பாமக, தேமுதிக இன்னும் அதன் கூட்டணி முடிவை அறிவிக்கவில்லை.
இந்நிலையில் விஜய்யின் தவெக எங்கள் தலைமையில் தான் கூட்டணி, விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த சமயத்தில் அதிமுகவிலிருந்து பிரிந்து நால்வர் அணியாக உருவாகியுள்ள செங்கோட்டையன், டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா போன்றோர் யாருடன் கூட்டணி அமைப்பார்கள் என்பதை சஸ்பென்ஸாக வைத்துள்ளனர். இந்நிலையில் இவர்களின் கூட்டணி யாருடன் என்பதை செங்கோட்டையன் மறைமுகமாக கூறியுள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இவர், பாஜக எப்போதும் என்னை அழைத்து அறிவுறுத்தல் கொடுத்தது இல்லை. அமித்ஷாவை நேரில் பார்த்தேன், அப்போது பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டது. அதையெல்லாம் ஊடகங்களிடம் சொன்னால் அரசியல் நாகரிகமாக இருக்காது என்று கூறினார். மேலும் விஜய்யுடனான கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், கூட்டணி குறித்து எந்த தகவலும் இப்போது சொல்ல முடியாது, அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்பதே எனது ஆசை என்று கூறினார்.
இவரின் இந்த கூற்று சந்தேகத்தை வரவழைப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. ஏனென்றால் விஜய் உடன் கூட்டணி இல்லையென்றால் அதனை வெளிப்படையாக கூறியிருக்கலாம். அதை தவிர்த்து வேறு விதமாக இவர் பதிலளித்தது, விஜய் உடனான கூட்டணியை மறைமுகமாக ஒப்பு கொண்டார் என்றே பார்க்கப்படுகிறது. மேலும் டிடிவி தினகரனும் திமுகவிற்கும், நாங்கள் இடம்பெறும் கூட்டணிக்கும் தான் போட்டி என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது.

