DMK: பீகாரை தொடர்ந்து தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், தேர்தல் களம் விறுவிறுப்பாக செயல்பட தொடங்கியுள்ளது. பீகாரில் பெற்ற வெற்றியை போலவே தமிழகத்திலும் மாபெரும் வெற்றி பெற வேண்டுமென பாஜக கூறி வருகிறது. மேலும் பீகாரின் தேர்தல் முடிவுகள் தமிழகத்திலும் எதிரொலிக்கும் என்ற கருத்தும் வலுப்பெற்று வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் இருக்கும் நிலையில், அதிமுக-பாஜக கூட்டணி மட்டுமே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. திமுக கூட்டணியில் பல்வேறு விரிசல்கள் தொடர்வதால் அதன் நிலைமை இன்னும் ஓரிரு மாதத்தில் முடிவுக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தற்போது இருக்கும் அரசியல் சூழலில் எந்த ஒரு கட்சியும் கூட்டணி இல்லாமல் வெற்றி பெறுவது கடினம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கலைஞர் போன்ற மாபெரும் அரசியல் மேதாவிகள் இறந்ததிலிருந்தே திராவிட கட்சிகள் அதன் தனி பெரும்பான்மையை இழந்து வருகின்றன. மாநில கட்சிகளின் பிரச்சனையை தீர்ப்பதற்கு மத்திய அரசின் உதவியை நாடுவது இதற்கு சிறந்த உதாரணமாகும். கூட்டணி கட்சிகள் தான் வெற்றியை உறுதி செய்யும் என்பதால் திமுகவும், அதிமுகவும் அதனை தக்க வைத்து கொள்ள முயற்சித்து வருகின்றன.
இந்நிலையில் கூட்டணி கட்சிகள் இல்லையென்றால் திராவிட கட்சிகள் ஒன்றுமே செய்ய முடியாது என்பதை நிரூபிக்கும் வகையில், திமுகவை சேர்ந்த கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒரு கருத்தை கூறியுள்ளார். திமுகவிற்கு கூட்டணி தான் பலம், ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துகளையும், ஒவ்வொரு கொள்கைகளையும் கொண்டவர்களாக இருந்தாலும் எங்களின் பொது எதிரி யார் என்பதை அறிந்து போராடுவோம் என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து திமுக கூட்டணியில் ஏற்பட்டிருக்கும் விரிசலை சரி செய்யும் வகையில் அமைந்துள்ளது என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

