TVK CONGRESS: பீகாருக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டிலும் சட்டமன்ற தேர்தல் நடக்க போகிறது. இதனை எதிர்நோக்கி தமிழக தேர்தல் களம் மற்றும் மாநில கட்சிகள், பொது மக்கள் என அனைவரும் காத்திருக்கின்றனர். பீகாரில் படுதோல்வி அடைந்த காங்கிரஸ் தற்போது தமிழக தேர்தலை நம்பி தான் இருக்கிறது என்றே சொல்லலாம். பீகார் தேர்தல் முடிவுக்கு முன்னர் வரை தமிழகத்தில் அதிக தொகுதிகள் வேண்டும், ஆட்சியில் பங்கு வேண்டும் என்று ஸ்டாலினை வலியுறுத்தி வந்த காங்கிரஸ் முடிவுக்கு பின்னர் மௌனமாகிவிட்டது.
பீகாரில் தோல்வியை சந்தித்ததால், திமுக காங்கிரஸுக்கு தகுந்த முக்கியத்துவம் அளிப்பதில்லை என்பதை உணர்ந்த காங்கிரஸ், தவெக தங்களது கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தரப்படும் என்று கூறியது ஜாக்பாட் அடித்தது போல அமைந்து விட்டது. விஜய்க்கு காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களுடன் நல்ல நட்புறவு இருப்பதால் இந்த கூட்டணி உறுதியாகவும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர்களின் பேச்சும் அதனை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.
ஆனால் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை திமுக-காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது என்று கூறியிருந்தார். இந்நிலையில் தவெக கூட்டணிக்கு காங்கிரசுக்கு விருப்பம் இருப்பது போல காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரம் ஒரு கருத்தை கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், 2026 தேர்தலில் தமிழகம் முழுவதும் கணிசமான வாக்குகளை விஜய் குவிப்பார் என்றும், அந்த வாக்கு சீட்டாக மாறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும், பிரஷாந்த் கிஷோருக்கு, விஜய்க்கும் நிறைய மாறுபாடுகள் உள்ளன. இருவருக்கும் கிடைத்திருக்கும் ஆதரவு வேறு வேறு. இருவரையும் ஒப்பிட முடியாது என்று கூறி இருந்தார். இவரின் இந்த கருத்து, பீகாரில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததால், தமிழகத்தில் விஜய் கணிசமான வாக்குகளை பெறுவதன் மூலம் அவருடன் கூட்டணி அமைக்கலாம் என்ற எண்ணத்தில் காங்கிரஸ் உள்ளதாக பார்க்கப்படுகிறது.

