TVK DMDK: தமிழகத்தில் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கூட்டணி பற்றிய பேச்சுகளும், தொகுதி பங்கீடும் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்க, மக்களை சந்திக்கும் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அதிமுக மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயணத்தையம், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பயணத்தையும் தொடங்கியுள்ளது. அதே போல் தேமுதிகவும் உள்ளம் தேடி, இல்லம் நாடி என்ற பரப்புரயை மேற்கொண்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக ஜனவரி 9 ஆம் தேதி தேமுதிக சார்பில் கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய மாநாடு ஒன்று நடக்க இருக்கிறது. துரோகம் இழைத்தவர்களை வீழ்த்தும் வகையில் இந்த மாநாடு அமையும் என்று பிரேமலதா கூறியிருந்தார். மேலும் இந்த மாநாட்டில் தேமுதிக எந்த கட்சியுடன் கூட்டணி சேரும் என்பதையும் அறிவிக்கப்போவதாக கூறியிருக்கிறார். இந்நிலையில், பரப்புரையில் பேசிய பிரேமலதா, விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்தது தவெக-தேமுதிக கூட்டணியை உறுதிப்படுத்தி இருக்கிறது என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
விஜய் குறித்து பேசிய அவர், விஜய் எங்கள் வீட்டு பிள்ளை. அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. விஜயகாந்தை போலவே விஜய்யும் அரசியலில் சாதிக்க வேண்டும். விஜய்க்கு எப்போதும் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தது இல்லை என்று கூறியிருக்கிறார். இவரின் இந்த பேச்சு, கடலூர் மாநாட்டிற்கு முன்பே பிரேமலதா கூட்டணியை அறிவித்து விட்டதாக பார்க்கப்படுகிறது. கரூர் சம்பவத்தில் விஜய்யை விளாசிய இவர் தற்போது விஜய்க்கு ஆதரவு தெரிவித்திருப்பது, விஜய் ஆட்சியில் பங்கு என்று கூறியதால் தான் என்ற கருத்தும் வலுப்பெறுகிறது.

