TVK AMMK: தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்தே அக்கட்சி அனைத்து ஊடகங்களிலும் முதல் இடத்தில் உள்ளது. அந்த அளவிற்கு விஜய்யின் கட்சி பேசப்பட்டு வருகிறது. இவருக்கான ஆதரவை கண்டு முன்னணி கட்சிகள் பலவும் தவெக உடன் கூட்டணி சேர்வது குறித்து ஆலோசனை நடத்தி வந்தனர். அதில் முதல் கட்சியாக இருந்தது அதிமுக தான். ஆனால் முதல்வர் வேட்பாளர் விஜய் தான். தவெக தலைமையில் தான் கூட்டணி இயங்கும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனால் அதிருப்தியடைந்த இபிஎஸ் அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார். விஜய்யின் முடிவை தனக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்த டிடிவி தினகரன், இபிஎஸ் முதல்வராக்கவா விஜய் கட்சி ஆரம்பித்தார், தவெகவுக்கும், திமுகவுக்கும் இடையே தான் போட்டி என்பது போன்ற கருத்துக்களை இபிஎஸ்க்கு எதிராகவும், விஜய்க்கு ஆதரவாகவும் தெரிவித்து வந்தார். இவரின் இந்த பேச்சு மூலம், விஜய் அதிமுக கூட்டணியில் இணைந்து விட கூடாது என்ற இவரது எண்ணம் வெளிப்படுகிறது.
இவ்வாறு விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வந்த தினகரன், விரைவில் தவெக கூட்டணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் தினகரன் மற்றொரு கருத்தையும் கூறியுள்ளார். சபா நாயகர் அப்பாவு, விஜய்க்கு மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறது என்று கூறியது குறித்த கேள்விக்கு, தவெக என்றால், திமுகவிற்கு அலர்ஜி என்பது அவர்கள் பேசுவதிலிருந்து தெரிகிறது என்று கூறியுள்ளார். இவர் தொடர்ந்து விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வருவது விஜய் உடன் கூட்டணியில் இணைவதற்கான முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

