ADMK: தமிழக தேர்தல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி சுழன்று கொண்டிருக்கும் வேளையில், அதிமுகவில் மட்டும் தலைமை போட்டி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இபிஎஸ் அதிமுகவின் தலைமை பதவியை ஏற்றதிலிருந்தே இந்த நிலை தொடர்கிறது. முதலில், அதிமுகவின் முக்கிய முகமாக இருந்த சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் போன்றோரை அதிரடியாக கட்சியிலிருந்து நீக்கிய இபிஎஸ் தற்போது அதனை முந்தும் வகையில் அதிமுக ஒன்றிணைய வேண்டுமென கூறிய செங்கோட்டையனையும் கட்சியிலிருந்து நீக்கிவிட்டார். செங்கோட்டையன் அதிமுகவில் 50 ஆண்டு காலமாக இருந்து வருகிறார்.
இவரை நீக்கியது அரசியல் அரங்கிலும், அதிமுக வட்டாரத்திலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதால், இவரின் கோட்டையாக அறியப்படும், கோபிச்செட்டிபாளையத்தில் அதிமுகவின் வாக்குகள் சிதறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனை சரி செய்ய நினைக்கும் இபிஎஸ் அதன் முதல் அடியாக, கோபிச்செட்டிபாளையத்தில் தனது இரண்டாம் கட்ட சுற்றுபயணத்தை தொடங்க உள்ளார். செங்கோட்டையனின் நீக்கத்திற்கு பிறகு அவரது தொகுதியில் தொடங்கப்படும் இந்த பயணம் அரசியல் நோக்கில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த தொகுதியில் இபிஎஸ் மேற்கொள்ளும் பயணம் தான், தேர்தலில் கோபிசெட்டிபாளையத்தில் அதிமுகவிற்கு எந்த அளவு ஆதரவு கிடைக்கும் என்பதை உறுதி செய்யும் என்று பலரும் கூறுகின்றனர். மற்றும் சிலர், கோபிசெட்டிபாளையத்தில் இபிஎஸ் எவ்வளவு முயற்சி செய்தாலும், செங்கோட்டையன் இல்லாமல் அதிமுக அந்த தொகுதியில் வெற்றி பெற முடியாது என்றும் கூறி வருகிறார்கள். இந்நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையனுக்கு அடுத்த படியாக மக்கள் செல்வாக்கு உள்ள நபரை இபிஎஸ் தேடி வருகிறார் என்றும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

