TVK DMK: அடுத்த வருடம் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலுக்காக தமிழக அரசியல் களம் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் பல சுவாரசியமான சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் அமைந்த நிகழ்வு தான் விஜய்யின் அரசியல் பிரவேசம். சுமார் ஒன்றரை வருடத்திற்கு முன்பு கட்சி ஆரம்பித்த விஜய்க்கு இப்போது வரை பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும், முன்னணி கட்சிகளை சேர்ந்த சில தலைவர்கள் எதிர்த்தாலும், இன்னும் சிலர் விஜய்க்கு ஆதரவாகவே பேசி வருகின்றனர். அதோடு தவெகவில் இணைய ஆர்வம் காட்டியும் வருகின்றனர்.
அந்த வகையில் திமுகவின் முன்னாள் பேச்சாளரும், அரசியல் விமர்சகருமான நாஞ்சில் சம்பத் தவெகவில் இணைய போவதாக செய்திகள் பரவின. இது குறித்து பேசிய அவர், விஜய் என்னை அழைத்தால் நிச்சயம் தவெக கூட்டங்களுக்கு பேச செல்வேன் என்றும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தமிழக அரசியலில் நிச்சயம் ஒரு மாற்றத்தை கொண்டு வரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், எனக்கு கோடி ரூபாய் கொடுத்தாலும் விஜய்யை பற்றி ஒரு வார்த்தை கூட தவறாக பேச மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.
திமுகவில் பல ஆண்டுகளாக இருந்து வரும் இவர், தவெக அரசியலுக்கு வந்ததிலிருந்தே அதற்கு தனது முழு ஆதரவையும் தெரிவித்து வருவது திமுகவிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன் ஒரு முறை திமுக சார்பில் அறிவு திருவிழா நடத்தப்பட்ட போது, நாஞ்சில் சம்பத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அதற்கு காரணம் விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பது தான் என்று நாஞ்சில் சம்பத் கூறியது குறிப்பிடத்தக்கது. திமுகவிலிருந்து ஒதுக்கி வைக்கப்படுவதை உணர்ந்த அவர் தவெகவில் இணைய ஆர்வம் காட்டி வருவதாகவும் சில கூறுகின்றனர். நாஞ்சில் சம்பத்தின் இந்த கருத்து அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

