TVK BJP: நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்திலிருந்தே அவர் யாருடன் கூட்டணி அமைப்பார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் மேலோங்கி உள்ளது. விஜய் தனது முதல் மாநாட்டிலேயே தவெகவின் கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். ஆனால் பாஜக தவெகவை கூட்டணியில் சேர்ப்பதற்கான வேலையை செய்து வந்தது. இது கரூர் சம்பவத்தில் நன்றாக தெரிந்தது. ஆனாலும் கொள்கை எதிரியுடன் கூட்டணி அமைக்க முடியாது என்ற முடிவில் விஜய் தெளிவாக உள்ளார் என்பது தெரிகிறது.
கரூர் சம்பவத்தில் பாஜக விஜய்க்கு நேரடியாக ஆதரவு தெரிவித்தும், பாஜக, திமுகவை தவிர வேறு எந்த கட்சியாக இருந்தாலும் கூட்டணி வைக்க தயார் என்று தவெகவை சேர்ந்த அருண்ராஜ் கூறினார். இந்நிலையில் அதிமுக மட்டுமே பாஜக கூட்டணியில் இருப்பது பாஜகவிற்கு போதாது. அதனால் விஜய்யை எப்படியாவது கூட்டணியில் சேர்க்க வேண்டுமென முயற்சித்து வரும் பாஜக தலைமை, அதனை செங்கோட்டையன் மூலம் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது.
இபிஎஸ்யால் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் முதலில் நால்வர் அணியாக உருவெடுத்த நிலையில், தற்போது விஜய் உடன் இணைய போவதாக பல்வேறு ஊடகங்களும் கூறுகின்றன. முதலில் தவெகவில் செங்கோட்டையன் இணைந்த பின்னர், மெல்ல மெல்ல விஜய்யை பாஜக பக்கம் சேர்ப்பதற்கான பணியை செங்கோட்டையனுக்கு பாஜக கொடுத்துள்ளதாக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றனர். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் 2 முறை அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன், இதை பற்றி தான் பேசியுள்ளார் என்று பலரும் கூறுகின்றனர்

