TVK ADMK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்காக தேர்தல் ஆணையம் தொடங்கி மாநில கட்சிகள் வரை அனைத்தும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்கிடையில் மத்திய அரசு கொண்டு வந்த SIR பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த SIR சீர்திருத்தத்தை அதிமுக ஆதரிக்க, திமுக எதிர்த்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க அதிமுகவை சேர்ந்த பலரும் திமுகவில் இணைந்து வருவது வாடிக்கையாகிவிட்டது. திமுகவில் மட்டுமல்லாது புதிய கட்சியான தவெகவிலும் இணைந்து வருகின்றனர். இது அதிமுகவிற்கு தேர்தலில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதனை அறிந்த இபிஎஸ் தனக்கு தலைமை தான் முக்கியமென்று பிரிந்தவர்களை கட்சியில் சேர்க்காமல் உள்ளார்.
இந்நிலையில் பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டுமென அதிமுக தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய செங்கோட்டையனை கட்சியின் அடிமட்ட தொண்டன் உள்ளிட்ட அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கினார். இதனை தொடர்ந்து நால்வர் அணியாக உருவான செங்கோட்டையன், அடுத்த என்ன செய்ய போகிறார் என்று அரசியல் களமே ஆவலுடன் எதிர்பார்த்த சமயத்தில், 2 தினங்களாக அவர் தவெகவில் இணைய போவதாக ஊடகங்கள் கூறி வருகின்றன. மேலும் தவெகவை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா செங்கோட்டையனை சந்தித்து பேசியதாகவும் கூறப்பட்டது. இது குறித்து விஜய் செங்கோட்டையனிடம் போனில் பேசியதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்நிலையில் செங்கோட்டையன் தவெவில் இணைந்தால் அவருக்கு துணை முதல்வர் பதவி தர அதிக வாய்ப்புள்ளது என்ற கருத்து வலுப்பெறுகிறது. செங்கோட்டையன் மிகுந்த அரசியல் அனுபவம் வாய்ந்த நபர் என்பதாலும், ஈரோடு தொகுதியில் பலமுறை வெற்றி பெற்றவர் என்ற அடிப்படையிலும் இவருக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது சரியாக இருக்கும் தவெக தலைமை நினைக்கிறது. மாற்று கட்சியை சேர்ந்தவர்களுக்கு துணை முதல்வர் பதவி தருவதற்கு தவெகவை சேர்ந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கியது அதிமுகவிற்கு எந்த விதத்திலும் பாதிப்பு இல்லையென்று கூறி வந்த இபிஎஸ்க்கு இது பேரதிர்ச்சியாக இருக்கும் என்றும் கணிக்கப்படுகிறது.

