TVK DMDK: சட்டமன்ற தேர்தலுக்காக கட்சிகளனைத்தும் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன. அதிமுக உடன், பாஜக, தாமக கூட்டணி மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது. திமுக கூட்டணி கட்சிகளிடையே பல்வேறு சலசலப்புகள் நிலவி வருவதால், அந்த கூட்டணி எப்போது வேண்டுமானாலும் முறியலாம் என்ற நிலையில் உள்ளது. இந்நிலையில் இந்த இரண்டு கட்சிகளும், மூன்றாம் நிலை கட்சிகளாக பாமக, தேமுதிக உடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். பாமக இரண்டாக பிரிந்துள்ளதால், அதன் முடிவு என்னவென்று தெரியவில்லை. ஆனால் கூடிய விரைவில் கூட்டணி அறிவிக்கப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
மீதமிருக்கும் கட்சியான தேமுதிக, திராவிட கட்சிகள் மற்றும் புதிதாக உதயமான தவெக என மூன்று பக்கமும் கதவை திறந்து வைத்துள்ளது. தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்று பலரும் பிரேமலதாவிடம் கேள்வியெழுப்பிய போது, அதனை கடலூரில் நடைபெறும் மாநாட்டில் தான் அறிவிப்போம் என திடமாக கூறி வருகிறார். ஆனால் தேமுதிகவின் ஒவ்வொரு பிரச்சாரத்திலும், ஒவ்வொரு கட்சியில் சேரப்போவது போன்ற சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில், அதிமுகவில் சேரப்போவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது ஆர்.பி. உதயகுமாரின் சந்திப்பு. பின்னர் அவரது அடுத்த பரப்புரையில் திடீரென அதிமுகவிற்கு எதிராக பேசினார்.
இவ்வாறு தேமுதிக எந்த கூட்டணியில் சேரும் என்பது சஸ்பென்ஸாகவே இருந்து வரும் நிலையில், தற்போது அவர் தவெகவில் இணைவது போன்ற ஒரு கருத்தை கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், வெறுமனே ராஜ்யசபா சீட்டுக்காக கூட்டணி வைக்கும் இயக்கம் இந்த தேமுதிக கிடையாது. தொண்டர்கள் விரும்பும், மக்கள் விரும்பும் கூட்டணியை வலுவாக அமைப்போம் என்று உறுதி கூறியுள்ளார். அதிமுக, திமுக மீது தற்போது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ள காரணத்தினால், மக்கள் விரும்பும், தொண்டர்கள் விரும்பும் இயக்கமாக இப்போதைக்கு இருப்பது தவெக தான் என்பதால், அவர் விஜய் கூட்டணியை தான் குறிப்பிட்டுள்ளார் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

