ADMK TVK: 2026 சட்டமன்ற தேர்தலில் பல்வேறு திருப்பங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் நடைபெறும் தேர்தல் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அதிமுக, திமுக தான். அதனை மிஞ்சும் வகையில் உதயமாகியுள்ளது தான் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். திராவிட கட்சிகளை நோக்கியே சுழன்று கொண்டிருக்கும் அரசியல் களம் தற்போது மூன்றாவதாக விஜய் பக்கம் திரும்பியுள்ளது. விஜய் தனது முதல் மாநாட்டிலேயே தவெகவின் கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக என்று பகிரங்கமாக அறிவித்து விட்டார்.
திமுகவை எதிரி என்று கூறியதால் நிச்சயமாக அவர் அதிமுக உடன் தான் கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது விஜய் அதிமுக உடனும் கூட்டணி அமைக்க மாட்டார் என்பது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் விஜய் அதிமுகவை மறைமுக எதிரியாக நினைத்து வருவதாக அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். அதற்கு காரணம், விஜய் அதிமுக கூட்டணியை உதறித் தள்ளியது. மேலும் கரூர் சம்பவத்தில் விஜய்யின் குரலாக ஒலித்து எல்லா வகையிலும் விஜய்க்கு உதவிய அதிமுகவிற்கு விஜய் இது வரை ஒரு நன்றி கூட சொல்லவில்லை.
அது மட்டுமல்லாமல், சில பரப்புரையில் அதிமுகவை மறைமுகமாகவும் விமர்சித்துள்ளார். விஜய் அதிமுகவையும் எதிரியாக தான் நினைக்கிறார் என்பதற்கு முக்கியமான சான்று செங்கோட்டையனை தவெகவில் சேர்க்க நினைப்பது. செங்கோட்டையனை மட்டுமல்லாது, மேலும் சில முக்கிய தலைவர்களை தவெகவில் சேர்ப்பதற்கான பணியை விஜய் செய்து வருகிறார். திமுகவை அரசியல் எதிரி என்று நேரடியாக அறிவித்த விஜய், அதிமுகவை மறைமுகமாக எதிர்க்கிறார் என்பது இதிலிருந்து நிரூபணமாகிறது என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

