ADMK: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தமிழக அரசியல் களம் புதிய புதிய திருப்பங்களை சந்தித்து வருகிறது. எப்போதுமே அதிமுக-திமுக என இருந்த அரசியல் களம் தற்போது நான்கு முனை போட்டியாக மாறியுள்ளது. அதிமுக, திமுக, தவெக, நாதக என நான்கு முக்கிய கட்சிகளின் தாக்கம் பெரியளவில் இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அனைத்து கட்சிகளும் மக்களை சந்திக்கும் பணிகளிலும், தொகுதி பங்கீட்டிலும், கூட்டணி வியூகங்ககளிலும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இப்படி இருக்கு நிலையில், திராவிட கட்சிகளில் பல்வேறு சச்சரவுகள் நிலவி வருகின்றன. அதில் முக்கியமானதாக பார்க்கப்படுவது, அதிமுகவில் ஏற்பட்ட பிரிவுகளும் அவர்கள் ஒரு அணியாக உருவானதும் தான்.
இவ்வாறு நால்வர் அணியாக உருவானவர்கள், இதனை மையப்படுத்தியே இயங்குவார்கள் என்று நினைத்த சமயத்தில் ஆளுக்கொரு திசையில் செல்ல முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. அப்படி அமைந்தது தான் ஓபிஎஸ்யின் தனிக்கட்சி முடிவு, தினகரனின் கூட்டணி, மற்றும் செங்கோட்டையனின் பதவி விலகல். கட்சியின் அடிமட்ட தொண்டன் உள்ளிட்ட அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்ட செங்கோட்டையன் இன்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் கோபிச்செட்டிபாளையத்தில், 8 முறை அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதனால் இந்த தொகுதி அப்போதிலிருந்தே அதிமுகவின் தொகுதியாகவும், செங்கோட்டையனின் கோட்டையாகவும் கருதப்பட்டது.
இந்நிலையில் இவர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் தவெகவில் இணைய போகிறார் என்ற தகவலும் பரவி வருகிறது. இதனால் இபிஎஸ் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளார் என்று பலரும் கூறுகின்றனர். கோபியில் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் அதிமுக இம்முறை செங்கோட்டையனின் விலகலால் பலவீனமடைந்துள்ளது. இதன் காரணமாக 2026 தேர்தலில் கோபியில் அதிமுக வெற்றி பெறுவது கடினம் என்றே பார்க்கப்படுகிறது. இதனால் செங்கோட்டையனுக்கு அடுத்ததாக கோபியில் வலுவான வேட்பாளரை நிறுத்துவதற்கான பணியை இபிஎஸ் மேற்கொண்டுள்ளார் என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. இதற்கான தேடுதல் வேட்டையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

