ADMK AMMK: தமிழகத்தில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் களம் புதிய வேகமெடுத்துள்ளது. தேர்தல் முடிவுக்கு முன்னரே நாம் தாம் இந்த தேர்தலில் வெல்ல போகிறோம் என அனைத்து கட்சிகளும் கூறி வருகின்றனர். இந்த சமயத்தில் வழக்கம் போல அதிமுகவும், திமுகவும் போட்டி போட்டு கொண்டிருக்கிறது. இது எப்போதும் நடக்கும் நிகழ்வு என்றாலும் தற்போது, புதிதாக மூன்றாவது அணியும் உருவாகியுள்ளது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி சுமார் ஒன்றரை வருடங்களே ஆன நிலையில் அதற்கான ஆதரவு யாரும் எதிர்பார்த்திராத உச்சத்தில் உள்ளது.
முன்னணி கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் கூட தவெகவில் சேர விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அரங்கேறிய நிகழ்வு தான் அதிமுகவின் முக்கிய முகமாகவும், கோபிச்செட்டிபாளையத்தில் 8 முறை எம்.எல்.ஏ வாகவும் இருந்த செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது. இவர் தவெகவில் சேர்வது உறுதியான நிலையில், இது குறித்து டிடிவி தினகரனிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பிய போது, பேசிய அவர், இரு தினங்களுக்கு முன்பு கூட செங்கோட்டையன் அண்ணனை சந்தித்தேன். கட்சியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து அவர் மிகவும் மன வருத்தத்தில் இருக்கிறார். பழைய கதைகள் எல்லாம் பேசுவார்.
அந்த சந்திப்பின் போது கூட, எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதை பற்றியோ, விஜய்யை சந்திப்பதை பற்றியோ அவர் என்னிடம் எதுவும் பேசவில்லை. எல்லாவற்றையும் தாண்டி அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு என்று கூறியுள்ளார். செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின்பு நால்வர் அணியுடன் ஐக்கியமானார். இதன் பின்னர் இவர் ஓபிஎஸ், சசிகலா, தினகரனுடன் தான் பயணிப்பார் என்று நினைத்த சமயத்தில், இவர் விஜய்யை சந்தித்து தவெகவில் இணைய போகும் செய்தி, தினகரனுக்கு தெரியாதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தினகரனின் இந்த கருத்து அவர் செங்கோட்டையன் மீது மன வருத்தத்தில் இருப்பதை உறுதிபடுத்தியுள்ளது என்பது தெளிவாகிறது.

