
ADMK BJP: 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி தமிழக தேர்தல் களம் அடியெடுத்து வைத்துள்ளது. மக்களை சந்திக்கும் பணியும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக தொடர்ந்து 7 வது முறையும் வெற்றி பெற்று விட வேண்டுமென முயற்சித்து வரும் நிலையில், தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுகவும் அதற்கு இணையாக போட்டி போட்டு வருகிறது. அதிமுகவின் இத்தனை தோல்விகளுக்கு முக்கிய காரணம் இபிஎஸ்யின் தலைமையும், கட்சி பல்வேறு பிரிவுகளாக பிரிந்து இருப்பதும் என அதிமுகவை சேர்ந்தவர்களே கூறியுள்ளனர்.
அதிமுக பல்வேறு பிரிவுகளாக பிரிந்ததற்கு காரணம், அதன் கூட்டணி கட்சியான பாஜக தான் என்ற கருத்தும் வலுப்பெறுகிறது. ஏனென்றால், பாஜக தற்சமயம் தமிழகத்தில் காலூன்ற முடியாத நிலையில் உள்ளது. பாஜகவிற்கு தமிழகத்தில் நுழைவதை விட திமுகவின் எதிர்ப்பாளர் பாஜக என்ற பட்டம் தான் வேண்டும். இப்போது திமுகவுக்கு எதிரியாக அதிமுக இருப்பதால் அந்த நிலையை பாஜக மாற்ற நினைக்கிறது.
மேலும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் பாஜக உடன் கூட்டணி அமைத்ததும், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின் செங்கோட்டையன் மூன்று முறை டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசியதும் அதிமுக பிரிவினையில் பாஜகவிற்கு தொடர்பு உண்டு என்பதை நிரூபிக்கிறது. தற்சமயம் அதிமுக பலவீனமடைந்து உள்ளதால், திமுக மட்டுமே தமிழகத்தில் பலம் வாய்ந்த கட்சியாக உள்ளது. இதனால் அதிமுகவை கூட்டணியிலிருந்தே மேலும் பலவீனப்படுத்தி, தமிழகத்தில் திமுகவிற்கு அடுத்த படியான இரண்டாவது கட்சியாக உருவெடுக்க பாஜக முயற்சிக்கிறது. இந்த கருத்தை மதிமுகவை சேர்ந்த துரை வைகோ எம்.பியும் கூறியதும் குறிப்பிடத்தக்கது.
