ADMK DMK CONGRESS: 2026 யில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் களம் புதிய வேகமெடுத்துள்ளது. தொடர்ந்து நடைபெற்று வரும் புதிய புதிய திருப்பங்களால், நொடிக்கு நொடி பரபரப்பாகவே உள்ளது. இந்த பரபரப்புக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் அதிமுகவில் பல அணிகள் உருவாகி உள்ளன. இந்நிலையில் அதிமுகவிலிருந்து இபிஎஸ்யால் வெளியேற்றபட்ட சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ், மற்றும் அண்மையில் நீக்கப்பட்ட செங்கோட்டையன் போன்றோர் ஒன்றிணைந்து நால்வர் அணியாக உருவெடுத்தனர்.
இவர்கள் நால்வரும் அதிமுகவின் முக்கிய முகம் மட்டுமல்லாது, இவர்களின் ஆதரவாளர்கள் அதிமுகவில் நிறைய பேர் உள்ளனர். இப்படி இருக்கும் பட்சத்தில், இவர்கள் ஒரு அணியாக உருவெடுத்தது, அதிமுகவிற்கு தேர்தல் முடிவில் பெரிய இழப்பை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டது. இதன் காரணமாக விஜய் உடன் கூட்டணி அமைக்க இபிஎஸ் முயன்றார். ஆனால் இது தோல்வியிலேயே முடிந்தது. இதனை தொடர்ந்து அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் இபிஎஸ்யை பழிவாங்க வேண்டுமென்ற நோக்கில் யாரும் எதிர் பாராத சமயத்தில் தவெகவில் இணைந்தார்.
50 ஆண்டுகள் அரசியல் அனுபவம் வாய்ந்த செங்கோட்டையன், மிகப்பெரிய திராவிட கட்சியிலிருந்து விலகி, புதிய கட்சியில் இணைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவர்களது கருத்துக்களை வெளிப்படுத்திய நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி கார்த்தி சிதம்பரம் ஒரு கருத்தை கூறியுள்ளார். செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்திற்கு சென்றது எந்த வித மறுபாட்டையும் ஏற்படுத்தாது.
அதிமுகவிற்கு வாடிக்கையாக வரும் வாக்குகள் அவர்களுக்கு வந்து விடும். என்று கூறியுள்ளார். இவரின் இந்த கூற்று திமுக கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சில காலமாகவே திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர், அதிமுகவின் வாக்கு வங்கியில் எந்த மாற்றமும் ஏற்படாது. அவர்களின் வாக்கு சிதறாது என்பது போன்ற கருத்தை கூறியிருப்பது அதிமுகவிற்கு ஆதரவு தெரிவிப்பது மட்டுமல்லாமல், அதிமுக முதன்மை கட்சி என்பதையும் உணர்த்தியுள்ளது என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

