கூட்டணி குறித்து உறுதி தெரிவித்த பிரேமலதா.. அதிருப்தியில் திராவிட கட்சிகள்!!

DMDK TVK: அடுத்த 6 மாதத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்காக அரசியல் அரங்கு எப்போதும் இல்லாத அளவிற்கு மாறாக இந்த முறை மிகவும் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுக உடன் பாஜக, தமாக கூட்டணி மட்டுமே உறுதியான நிலையில், திமுக உடன் காங்கிரஸ், விசிக, மதிமுக போன்ற கட்சிகள் தொடர்ந்து வருகின்றன. இப்படி இருக்கும் நிலையில், திராவிட கட்சிகள் இரண்டும் பாமக, தேமுதிக போன்ற மூன்றாம் நிலை கட்சிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.

பாமக இரண்டாக பிரிந்து இருக்கும் நிலையில், ராமதாஸ் திமுக பக்கமும், அன்புமணி அதிமுக பக்கமும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த கூட்டணி தற்சமயம் உறுதியாவது போல தெரியவில்லை. தேமுதிகவோ திமுக, அதிமுக, தவெக என மூன்று பக்கமும் கதவை திறந்து வைத்துள்ளது. கடலூரில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் தான் கூட்டணியை அறிவிப்போம் என பிரேமலதா முடிவாக இருந்தார். ஆனால் அதற்கு முன் நடைபெறும் பிரச்சாரம் ஒவ்வொன்றிலும் தனது கூட்டணியை மறைமுகமாக அறிவித்த வண்ணமே உள்ளார்.

இல்லம் தேடி, உள்ளம் நாடி என்ற பிரச்சார பயணத்தின் போது, செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, 2026 நிச்சயமாக கூட்டணி ஆட்சி தான் அமையும். அப்போது தேமுதிக கூட்டணி அமைச்சரவையில் இடம் பெரும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இப்போது இருக்கும் அரசியல் சூழலில் விஜய் மட்டும் தான் கூட்டணி கட்சிக்கு ஆட்சியில் பங்கு என கூறியிருக்கிறார். இதனால் பிரேமலதா விஜய் உடனான கூட்டணியை தான் மறைமுகமாக கூறியிருக்கிறார் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.