TVK VCK: தமிழ் திரையுலகில் மிக பிரபல நடிகராக அறியபட்ட விஜய், தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியாக மாற்றினார். இந்த கட்சி ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை வருடங்களுக்கு மேலான நிலையில் தனது முதல் சட்டமன்ற தேர்தலை சந்திக்க போவதாக விஜய் அறிவித்திருக்கிறார். அப்போதிலிருந்தே இவரது கட்சிக்கு ஆதரவு பெருகிய வண்ணம் உள்ளது. கரூர் சம்பவத்திற்கு பின் தவெக மீண்டு வராது என நினைத்த சமயத்தில் அது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியது. இந்நிலையில் தவெகவின் முதல் மாநாட்டிலேயே அரசியல் எதிரி திமுக என்றும், கொள்கை எதிரி பாஜக என்றும் விஜய் அறிவித்திருந்தார்.
தவெகவின் எதிரி திமுகவாக இருக்கும் பட்சத்தில் திமுகவின் கூட்டணி கட்சிகள் சில தவெகவையும், விஜய்யையும் விமர்சிப்பதை விட்டு விட்டு அவருக்கு ஆதரவாகவும், அவர் அரசியலில் வெற்றி பெற, அறிவுரைகளையும் வழங்கி வருகின்றனர். அதிலும் முக்கியமாக திமுக கூட்டணியில் நீண்ட காலமாக அங்கம் வகித்து வரும் விசிகவின் நிலைப்பாடு விஜய் வருகைக்கு பின் மாறி இருப்பது தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியிருகிறது. விசிகவின் தலைவர் தொல். திருமாவளவன், செங்கோட்டையன் தவெகவில் இணைந்த போது, விஜய் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார்.
இது திமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது புதிதாக செய்தியாளர்களிடம் பேசிய திருமா, விஜய் வெறுப்பு அரசியலை உயர்த்தி பிடிக்கிறார். தவெக முன்வைக்கும் அரசியல், கொள்கை சார்ந்த அரசியலாக இல்லாமல், ஆளுங்கட்சி மீதான வெறுப்பை உமிழும் அரசியலாக இருக்கிறது என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், விஜய்யின் அரசியல் வருகையை முதன் முதலில் வரவேற்றது விசிக தான் என்றும் கூறியிருக்கிறார். திமுகவை கடுமையாக எதிர்க்கும் விஜய்யை ஆதரித்தோம் என கூறும் இவரது கருத்து திமுகவிற்கு எதிரானதாகவே பார்க்கப்படுகிறது.

