BJP PNK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்காக திராவிட கட்சிகள் தொடங்கி சிறிய கட்சிகள் வரை அனைத்தும் தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. மேலும் மத்திய அரசு செயல்படுத்திய SIR பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வழக்கம் போல அதிமுகவும் திமுகவும் போட்டி போட, புதிதாக தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியும் உதயமாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. தற்போது, திமுக கூட்டணி கட்சிகள் எப்போது வேண்டுமானாலும் பிரியலாம் என்ற நிலையில் உள்ளது.
அதிமுக உடன் பாஜக, தமாக கூட்டணி மட்டுமே உறுதியான நிலையில், தற்போது 2026 தேர்தலை கருத்தில் கொண்டு பாஜக உடன் புதிய நீதி கட்சியும் கூட்டணி அமைத்துள்ளது. இந்நிலையில் தொகுதி பங்கீடு குறித்து பேசிய புதிய நீதி கட்சியின் நிறுவனர், ஏ.சி. சண்முகம் இந்த முறை 8 அல்லது 9 தொகுதிகளை கேட்டு பெறுவோம் என்று கறாராக கூறியிருக்கிறார். குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரணி, கீழ்பென்னாத்தூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் ஒன்றில் புதிய நீதி கட்சி போட்டியிடும் என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.
பாஜக கட்சி அதிமுக தலைமையின் கீழ் இயங்கி வரும் நிலையில் புதிய நீதி கட்சி இவ்வாறான கோரிக்கையை முன் வைத்திருப்பது பாஜகவிற்கு மட்டுமல்லாது, அதிமுகவிற்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பாஜக கொங்கு மண்டலத்தை கேட்டு வலியுறுத்தி வரும் நிலையில், புதிய நீதி கட்சி 9 தொகுதிகளை கேட்பது அதிமுகவின் உள்வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

