DMK TVK: நடிகர் விஜய் கட்சி துவங்கியதிலிருந்தே தன்னுடைய அரசியல் எதிரி திமுக தான் என்று திட்ட வட்டமாகக் கூறிவிட்டார். ஆரம்ப காலத்திலிருந்தே அதிமுகவுக்கும், திமுகவுக்கும் தான் போட்டி என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது திமுக-தவெக என்ற நிலை உருவாகியுள்ளது. சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் எதிர்க்கட்சியாகவும், ஆளுங்கட்சியாகவும் இருந்து வரும் திமுகவை பகைத்து கொண்டது விஜய்க்கு மிகப்பெரிய சவாலாகவே இருந்தது.
இந்நிலையில், விஜய் தனது முதல் தேர்தலிலேயே ஆட்சியை பிடிக்க வேண்டும், முதல்வர் பதவி போன்றவற்றிற்கு ஆசைப்படுவதை பலரும் விமர்சனம் செய்தனர். மேலும் விஜய்யையும், அவரது தொண்டர்களையும் அரசியல் அறிவு இல்லாதவர்கள் தற்குறிகள் போன்ற தகாத வார்த்தைகளால் கிண்டலடித்து வந்தனர். தவெகவுக்கு திமுக அரசியல் எதிரியாக இருக்கும் பட்சத்தில் இவ்வாறான வார்த்தைகளை தவெக தொண்டர்கள் மீது பயன்படுத்த கூடாது என திமுகவின் எம்எல்ஏ எழிலன் பொது நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.
இது திமுகவில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. தவெகவுக்கு ஆதரவாக கருத்து கூறியதால் கூடிய விரைவில், இவர் தவெகவில் இணைவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக தவெகவின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா, திமுகவின் முக்கிய அமைச்சர்கள் தவெகவில் இணைய போகிறார்கள் என்று கூறியதும், தவெகவுக்கு ஆதரவாக பேசியதற்காக காஞ்சிபுரத்தில் நடைபெற்ற உள்ளரங்கு மக்கள் சந்திப்பில் விஜய் எழிலனுக்கு நன்றி தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

