BJP: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாத காலமே இருக்கும் நிலையில் தேர்தல் களம் அதன் பணிகளை விரைந்து செய்து வருகிறது. திராவிட கட்சிகள் தொடங்கி சிறிய கட்சிகள் வரை அனைத்தும் மக்கள் மனதில் தங்களை நிலைநிறுத்தும் பணியில் மும்முரம் காட்டி வருகின்றன. மற்ற கட்சிகளை விட அதிமுகவிற்கு இந்த தேர்தல் மிகவும் முக்கியம் என்பதால் தேர்தலை கருத்தில் கொண்டு பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ளது. கூட்டணி அமைப்பதற்கு முன்பு, மாநில தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தான் இபிஎஸ் பாஜக கூட்டணியில் சேர்ந்தார்.
அதன் படி, அண்ணாமலை பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதன் பின் அவருக்கு தேசிய அளவில் பொறுப்புகள் வழங்க வாய்ப்பிருப்பதாக பேசப்பட்டது. ஆனால் தற்போது வரை அதற்கான நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளாததால் பாஜக மீது அண்ணாமலை அதிருப்தியில் இருந்து வருவதாக பலரும் கூறுகின்றனர். இதன் காரணமாக இவர் புதிய கட்சி துவங்க போகிறார் என்ற வாதமும் வலுப்பெற்றது. இந்நிலையில் இதனை உறுதிப்படுத்தும் விதமாக திமுகவின் பேச்சாளராக இருந்த நாஞ்சில் சம்பத் அண்ணாமலை டிசம்பரில் புதிய கட்சி ஆரம்பிக்க போகிறார். அதன் பின் விஜய் உடன் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளார் என்று கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.
சில மாதங்களாகவே அண்ணாமலை புதிய கட்சி ஆரம்பிக்க போகிறார் என்ற செய்தி பாஜகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது இவர் கூறிய கருத்து அதனை மேலும் வலுப்படுத்துவது போல அமைந்துள்ளது. பாஜகவிற்கு தமிழகத்தில் பெரிய அளவில் செல்வாக்கு இல்லாமல் இருந்தது. ஆனால் அண்ணாமலை மாநில தலைவராக பொறுப்பேற்ற பின் பாஜகவிற்கான ஆதரவு சற்று அதிகரித்தது. இந்த சமயத்தில் அண்ணாமலை கட்சி தொடங்க இருப்பது பாஜகவிற்கு தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரிய இழப்பை ஏற்படுத்தும் என்று மதிப்பிடப்படுகிறது.

