பாமக பிரச்சனையை டீல் செய்யும் டெல்லி மேலிடம்.. முடிவுக்கு வரும் தந்தை-மகன் மோதல்!!

PMK BJP: இன்னும் 5, 6 மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான பணிகளில் தேர்தல் களம் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. திராவிட கட்சிகள் தொடங்கி சிறிய கட்சிகள் வரை அனைத்தும்  மக்களை சந்திக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளன. அதிமுகவிலும், திமுகவிலும் உட்கட்சி பிரச்சனை தலைதூக்கி வரும் நிலையில், பாமகவில் ஏற்பட்டுள்ள தந்தை மகன் பிரச்சனை நாளுக்கு நாள் வேகமெடுத்து கொண்டே செல்கிறது. கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தனது பேரன் முகுந்தனுக்கு இளைரணி தலைவர் பதவியை வழங்கியதில் அன்புமணிக்கு உடன்பாடு இல்லை.

இதனை பொது மேடையிலே பகிரங்கமாக வெளிப்படுத்தி இருந்தார். இதனை பிறகு அன்புமணி ஆதரவாளர்களை ராமதாஸ் கட்சியை விட்டு நீக்குவதும், ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணி நீக்குவது போன்ற செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதனால் கட்சி இரண்டாக பிளவுபட்டிருந்தது. இதனை தொடர்ந்து அன்புமணியின் தலைவர் பதவி ராமதாஸால் பறிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் கட்சியின் தலைவர் மற்றும் சின்னத்திற்கு உரியவர் அன்புமணி தான் என்று தீர்ப்பளித்தது.

இதனை சட்ட ரீதியாக எதிர்கொள்வதாக கூறிய ராமதாஸுக்கு தற்போது டெல்லி மேலிடம் உதவி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. பாமகவில் அப்பா-மகன் சண்டையை முடிவுக்கு கொண்டு வந்து பிறகு அவர்களை பாஜக கூட்டணியில் சேர்ப்பதே மத்திய அமைச்சர்களின் எண்ணம் ஆகும். பீகார் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக அடுத்த கட்டமாக தமிழக சட்டமன்ற தேர்தலில் கவனம் செலுத்தி வரும் நிலையில், தற்போது பாமக பிரச்சனையில் தனது முழு கவனத்தை திருப்பியுள்ளது.