PMK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்காக கூட்டணி வியூகங்களும், தொகுதி பங்கீடும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் சிறிய கட்சிகள் தொடங்கி பெரிய கட்சிகள் வரை மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் தான் பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் தலைமை போட்டி ஆரம்பித்துள்ளது. ராமதாஸ் தனது பேரன் முகுந்தனுக்கு கட்சியின் இளைஞரணி தலைவர் பதவி வழங்கியதை அன்புமணி கடுமையாக எதிர்திருந்தார்.
இவர்கள் இருவரின் சண்டை பொது மேடையிலேயே வெடித்தது. இதனை தொடர்ந்து அன்புமணி ராமதாஸின் ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்குவதும், ராமதாஸ் அன்புமணியின் ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்குவதும் போன்ற பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறிவிட்டன. கடைசியில் அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து நீக்கினார் ராமதாஸ். ஆனால் தேர்தல் ஆணையம் அன்புமணி தான் தலைவர் என்று தீர்ப்பளிக்க ராமதாஸ் ஆத்திரமடைந்தார். இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதி மன்றத்தில் ராமதாஸ் தரப்பு வழக்கு தொடுக்க, பாமகவின் மாம்பழ சின்னம் முடக்கபட்டது.
மேலும் அன்புமணி தான் தலைவர் என்று தேர்தல் ஆணையம் கூறியதை மறுக்க முடியாது என்றும் உயர்நீதிமன்றம் கூறியது. இவ்வாறு இவர்கள் இருவருக்குமான சண்டை தொடர்ந்து கொண்டே போகும் நிலையில், அன்புமணி ராமதாஸ் பக்கம் சாய்வது போல ஒரு கருத்தை கூறியுள்ளார். அன்புமணி தனது சொந்த ஊரில் குலதெய்வ கோவிலில் வழிபாடு செய்த பிறகு, கூட்டத்தில் பேசினார். அப்போது, அய்யா இல்லையென்றால் யாரும் இல்லை.
அவர் ஒரு சமூக சீர்திருத்தவாதி. சமூக நீதி என்றால் அய்யா. கல்வி, வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல் என பல்வேறு விஷியங்களில் முன்னேற்றம் ஏற்படுவதற்காக பாடுபட்டவர் அவர். பின்தங்கிய நிலையில் இருப்பவர்கள் சுயமரியாதையோடு இருப்பதற்காக தான் மருத்துவர் ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கினர் என்று கூறிய அவர், இறுதியில் கண் கலங்கினார். இவரின் இந்த பேச்சு, இவருக்கு பாமக ஒன்றிணைய வேண்டும், மீண்டும் ராமதாஸுடன் சேர வேண்டும் என்ற விருப்பத்தை தெளிவுபடுத்தியுள்ளது என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

