CONGRESS: அடுத்த 5, 6 மாதத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற போவதால், தேசிய கட்சிகள் மாநில கட்சிகள் என அனைத்தும் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன. அதிலும் முக்கியமாக தமிழக தேர்தலில் அதிமுக-திமுக என்ற நிலை மாறி பாஜக-காங்கிரஸ் என்ற நிலை உருவாவது போல சில நிகழ்வுகள் நிகழ்ந்து வருகின்றன. பீகார் தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்றது. ஆனால் காங்கிரஸ் அதில் பாதியளவு வெற்றியை கூட பதிவு செய்யவில்லை. இதனால் தமிழக தேர்தலை மட்டுமே காங்கிரஸ் நம்பி இருக்கிறது.
திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் காங்கிரஸ், பீகார் தேர்தலுக்கு முன்பு வரை திமுக தலைமையிடம் அதிக தொகுதிகள், ஆட்சி பங்கு போன்ற கோரிக்கைகளை முன் வைத்து வந்தது. ஆனால் தேர்தல் முடிவுக்கு பின் வாய் திறக்கவில்லை. இதனால் காங்கிரஸ் பீகார் தேர்தல் முடிவின் மூலம் அதிருப்தியில் உள்ளது என பலரும் கூறினர். ஆனால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் பீகார் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் எதிரொலிக்காது, திமுக கூட்டணி வெற்றி பெறும் என கூறி வந்தனர்.
இந்நிலையில் திமுகவிடம் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்காக காங்கிரஸ் 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. அந்த குழு திமுகவிடம் ஆட்சி பங்கை கேட்டு வலியுறுத்தி வருவதாகவும், அதற்கு ஸ்டாலின் மறுத்ததாகவும் தகவல் வெளிவந்தது. இவ்வாறு காங்கரசுக்கும், திமுக தலைமைக்கு தொடர்ந்து கருத்து வேறுபாடு நிலவி வரும் வேளையில், தற்போது புதிதாக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் செங்கம் ஜி.குமார் அவரது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
மாநில செயற்குழு உறுப்பினர், ஒன்றிய குழு தலைவர், ராஜிவ் காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் போன்ற பல்வேறு பதவிகளை வகித்த இவரின் விலகல் காங்கிரசுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் சமயத்தில் தமிழகத்தில் இருக்கும் காங்கிரஸ் தலைவர்களின் விலகல் அக்கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்று கணிக்கப்படுகிறது.

