ADMK BJP: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையமும், கட்சிகளும் மும்முரமாக உள்ளன. தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் அதிமுகவிற்கு இந்த தேர்தல் மிகவும் முக்கியம் என்பதால், அது மிகவும் கவனத்துடன் கையாண்டு வருகிறது. ஆனால் அதிமுகவில் நிலவி வரும் தலைமை வெறி அதனை சறுக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும் முக்கிய தலைவர்களின் விலகலும், மாற்று கட்சியில் இணைவதும், அதிமுகவின் வாக்கு வங்கியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பலரும் கூறி வருகின்றனர்.
இதனை கண்டு கொள்ளாத இபிஎஸ் இரட்டை இலையின் வாக்கு எப்போதும் மாறாது என்று கூறி வருகிறார். பாஜக அதிமுக உடன் கூட்டணியில் இருந்து வரும் வேளையில், இபிஎஸ்க்கு எதிராக இருப்பவர்களை அமித்ஷா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவது இபிஎஸ்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், இரு தினங்களுக்கு முன்பு அமித்ஷாவை சந்தித்த ஓபிஎஸ் அவருடன் தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து கலந்துரையாடியதாகவும், அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என அமித்ஷாவிடம் கோரிக்கை விடுத்ததாக கூறினார்.
ஆனால் இவர்களின் சந்திப்பில் பேசியது குறித்து பாஜக வட்டாரங்கள் வேறு தகவல்களை கூறுகின்றன. அதில் ஓபிஎஸ், நான் தனிக்கட்சி ஆரம்பிக்க போவதில்லை என்றும், பாஜகவில் இணைய போவதாகவும் கூறியிருக்கிறார். மேலும் முக்குலத்தோர் வாக்குகள் ஓபிஎஸ்க்கு அதிகளவில் இருப்பதால், பாஜகவை தமிழகத்தில் நிலைபெற வைப்பது என் பொறுப்பு என்றும் அவர் அமித்ஷாவிற்கு வாக்களித்துள்ளார். இவரின் இந்த நிலைப்பாட்டை அறிந்த இபிஎஸ் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளதாக அதிமுக நிர்வாகிகள் கூறுகின்றனர்.

