TVK CONGRESS: அடுத்த வருடம் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக கட்சிகளனைத்தும் தங்களது பணியை தீவிரப்படுத்தியுள்ளன. அதிமுக, தேசிய கட்சியான பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், திமுக கடந்த சில வருடங்களாகவே காங்கிரசுடன் கூட்டணியில் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தான் நடிகர் விஜய் கட்சி தொடங்கி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார். ஆட்சியில் பங்கு தரப்படும் என்று விஜய் கூறியதாலும், விஜய்-ராகுல் நட்புறவு நல்ல நிலையில் இருப்பதாலும் இவர்களின் கூட்டணி உறுதி செய்யப்படும் என்ற கருத்து பரவலாக பேசப்பட்டது.
ஆனால் காங்கிரஸுக்கு 70 வருடங்களாக தமிழகத்தில் ஆளுங்கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும், இருந்து வரும் திமுகவை விட்டு விலகுவதில் விருப்பம் இல்லை. மேலும் பீகார் தேர்தலில் தோல்வியுற்றதால் திமுகவிடம் அதிக தொகுதிகளையும், ஆட்சி பங்கையும் கேட்டு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதற்காக சில வழிகளை ஆராய்ந்த காங்கிரஸ், கடைசியாக விஜய்யை பகடை காயாக பயன்படுத்த நினைத்தது. திமுகவிடம் எங்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்யாவிட்டால், தவெக உடன் கூட்டணி அமைத்து கொள்வோம் என்றும் கூறி வந்தனர்.
இது குறித்து திமுக தலைமை எந்த பதிலும் கூறாத நிலையில், நேற்று முன் தினம், காங்கிரஸ் அமைத்த ஐவர் குழு ஸ்டாலினை சந்தித்தது பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் பீகாரில் காங்கிரஸ் தோல்வியடைந்ததை மையப்படுத்தி, அவர்களின் கோரிக்கைகளை திமுக நிராகரித்ததாக கூறப்படுகிறது. இவ்வாறான சூழலில் தான் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியான, பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில் காங்கிரஸின் கோரிக்கைகளை திமுக நிராகரித்ததால் தவெக-காங்கிரஸ் கூட்டணி குறித்து பேசப்பட்டிருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. இதற்கு விஜய் தரப்பு பதில் என்னவாக இருக்கும் என ராகுல் எதிர்பார்த்து காத்திருப்பதாக காங்கிரஸ் நிர்வாகிகள் கூறுகின்றனர்.

