ADMK TVK: ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலா தயவில் முதல்வரான எடப்பாடி பழனிசாமி சசிகலாவையே கட்சியிலிருந்து அடியோடு நீக்கியது அதிருப்தியை ஏற்படுத்தியது. இவரை மட்டுமல்லாது, ஓபிஎஸ், டிடிவி தினகரன் என பலரையும் கட்சியிலிருந்து நீக்கினார். மேலும் சிலர் இபிஎஸ்யின் தலைமை பிடிக்காத காரணத்தினால் தானாக கட்சியிலிருந்து விலகினர். இவ்வாறு கட்சி பல அணிகளாக பிரிந்து கிடந்தது அதிமுகவிற்கு வாக்கு வங்கியில் சிக்கலை ஏற்படுத்தும் என்று பலரும் இபிஎஸ்யிடம் கூற, அப்போதும் கூட அவர் நீக்கியவர்களை கட்சியில் சேர்க்க மறுத்து விட்டார்.
இந்நிலையில் அதிமுகவின் பிரிவை மேலும் வலுப்படுத்தும் வகையில், மூத்த அமைச்சரான செங்கோட்டையன் இபிஎஸ்யால் வெளியேற்றப்பட்டார். இதனை தொடர்ந்து இவர் புதிய கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது பேசு பொருளானது. இது குறித்து டிடிவி தினகரனிடம் கேட்ட போது, அவர் தவெகவில் இணைவது பற்றி என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை என்று கூறினார். இத்தகைய நிலையில் இன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் என்பதால், அவரது நினைவிடத்திற்கு ஓபிஎஸ் மரியாதை செலுத்த வந்தார்.
அப்போது செங்கோட்டையனின் சேர்க்கை குறித்து கேட்ட போது, அவர் தவெகவில் சேர்ந்த பின் நான் அவரிடம் பேசவில்லை என்று கூறி பகீர் கிளப்பினார். மேலும் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலாவும் வந்திருந்தார். அவரிடமும் இந்த கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர், ஒருவர் மீது இருக்கும் கோபத்தால் அவசரப்பட்டு பெரிய முடிவுகளை எடுக்க கூடாது எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் வந்தவர்கள் இப்படி செய்வதை என்ன சொல்வதென்று தெரியவில்லை என்று கூறினார். செங்கோட்டையனின் பதவி பறிப்பின் போது இவர்கள் மூவரும் உடனிருந்த நிலையில், இவர்களுக்கு செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்ததில் விருப்பமில்லை என்பதை இந்த பதில் தெளிவுபடுத்துகிறது.

