TVK CONGRESS: விஜய் கட்சி தொடங்கிய நாள் முதல் இன்று வரை அவரது கட்சிக்கு பெருகும் ஆதரவு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மேலும், தவெகவின் பிரச்சாரத்திற்கு கூடும் மக்கள் கூட்டம் அதன் முதல் வெற்றியாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் விஜய்யின் கூட்டணி யாருடன் என்ற கேள்வி எழுந்த போது, அவர் கட்சி தொடங்குவதற்கு முன்பே காங்கிரசுடன் நெருக்கமாக இருந்ததால் காங்கிரஸ்-தவெக கூட்டணி அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் காங்கிரஸ் திமுகவிடம் அதிக தொகுதிகளை கேட்டு பெறுவதற்காக மட்டுமே தவெக பெயரை பயன்படுத்தி வந்ததது. தமிழக காங்கிரசை சேர்ந்தவர்களும் திமுக- காங்கிரஸ் உறுதியாக உள்ளது என கூறி வந்தனர். இந்நிலையில் தான் காங்கிரஸின் முக்கிய புள்ளியான பிரவீன் சக்கரவர்த்தி நேற்று விஜய்யை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இவர்களின் சந்திப்பு கூட்டணிக்குரிய அச்சாரமாக இருக்கும் என்று யூகிக்கப்பட்டது. இது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையிடம் கேட்ட போது, திமுகவுடன் காங்கிரஸ் கட்சியின் ஐவர் குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதுதான் எங்களுக்குத் தெரியும். விஜய்யுடன் பேசுங்கள் என அகில இந்திய காங்கிரஸ் தலைமை எங்களிடம் சொல்லவில்லை. விஜய்யை சந்திக்க பிரவீன் சக்கரவர்த்திக்கு நாங்கள் அனுமதியும் தரவில்லை என்று கூறியுள்ளார். காங்கிரஸ் தலைமையின் அனுமதி இல்லாமல் பிரவீன் விஜய்யை சந்தித்தது அவர் தவெகவில் சேர்வதற்கான சாத்தியகூறுகளாகவே பார்க்கப்படுகிறது. மேலும் தவெகவின் பரபரப்புரைக்கு கூடும் கூட்டத்தையும், விஜய்யையும் பிரவீன் பாராட்டி கருத்து பதிவிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

